சென்னை: தியாகராஜ நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் திமுகவின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஏஜி சம்பத், பாஜக தேசியச் செயலாளர் சி.டி. ரவி, இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ஆகியோர் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த சி.டி. ரவி, "தமிழ்நாடு மக்கள் அனைவரும் பாஜகவில் சேர வேண்டும். அதிமுக - பாஜக கூட்டணி மாபெரும் வெற்றிபெறும். கள நிலவரம் திமுகவிற்குச் சாதகமாக இல்லை.
2016ஆம் ஆண்டிலும் பல ஊடகங்கள் கருத்துக்கணிப்பு வெளியிட்டன, திமுக அதிமுகவை வெல்லும் என்றும் கூறின. அதையெல்லாம் மீறி மீண்டும் அதிமுகதான் ஆட்சியைப் பிடித்தது. இம்முறையும் அதிமுகதான் வெற்றிபெறும். திமுகவில் கட்டப்பஞ்சாயத்து, ரவுடிசம் உள்ளன. இது அவர்களுக்கு வெற்றியைத் தராது" என்றார்.
பின்னர் பேசிய ஏ.ஜி. சம்பத், "திமுகவில் உரிய சுயமரியாதை அளிக்கப்படவில்லை. தன்மானத்தைக் காப்பாற்றிக்கொள்ள பாஜகவில் இணைந்துள்ளேன். ஏழை, எளிய மக்களுக்காக திமுகவை ஆரம்பிக்கிறோம் என அண்ணா சொன்னார். கருணாநிதி மறைந்தபொழுதே எனக்கு திமுகவில் இடமில்லை என்ற முடிவிற்கு வந்துவிட்டேன்.
ஊழல் குற்றச்சாட்டே இல்லாத தலைவராகப் பிரதமர் நரேந்திர மோடி விளங்குகிறார். எனது தந்தையார் வழிவந்தவர்போல் பிரதமரைப் பார்க்கின்றேன்" என்று அவர் கூறினார்.
முன்னாள் திமுக அமைச்சர் கோவிந்தசாமியின் மகன்தான் ஏ.ஜி. சம்பத். திமுகவிற்கு உதயசூரியன் சின்னத்தை விட்டுக்கொடுத்தவர் கோவிந்தசாமி என்பது கூடுதல் தகவல்.
இதையும் படிங்க: செங்கல் திருடியதாக உதயநிதி ஸ்டாலின் மீது பாஜக புகார்!