சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள லேடி வெலிங்டன் கல்லூரி வளாகத்தில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 9 அடி உயர முழு உருவச்சிலையை, சட்டப்பேரவைத் தலைவர் தனபால், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு உயர்கல்வி மன்ற வளாகத்திற்கு, டாக்டர் ஜெ.ஜெயலலிதா வளாகம் என்று பெயரிடப்பட்ட பெயர் பலகையையும் அவர் திறந்து வைத்தார்.
அப்போது பேசிய முதலமைச்சர், “பல்வேறு சோதனைகளையும் வென்று அரசியலில் தனக்கென தனியிடம் பிடித்து சாதித்துக் காட்டிவர் ஜெயலலிதா. பெண்கள், குழந்தைகளுக்கு அரணாக விளங்கிய ஜெயலலிதாவின் வழியில் அதிமுக அரசும் செயல்பட்டு வருகிறது. இனி ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 24 ஆம் தேதி ஜெயலலிதாவின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும். தற்போது திறக்கப்பட்டுள்ள அவரது சிலைக்கு மரியாதை செலுத்தப்படும்.
கடந்த 4 ஆண்டுகளில் உயர்கல்விக்கு அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், 10 உறுப்புக் கல்லூரிகள், 7 கலை அறிவியல் கல்லூரிகள், 6 மாவட்டங்களில் புதிதாக சட்டக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன” எனப் பேசினார். இந்நிகச்சியில், அமைச்சர்கள், கல்லூரி நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: மதுரையில் ஜே.பி.நட்டா பங்கேற்கும் மாநாடு! - எல்.முருகன்