நாட்டின் 10ஆவது தலைமைத் தேர்தல் ஆணையரும் தேர்தல் நடத்தை விதிமுறைகளைத் தீவிரமாக அமல்படுத்தித் தேர்தல் ஆணையத்தை அதிகாரமிக்க அமைப்பாக அடையாளப்படுத்தியவருமான டி.என். சேஷன் உடல்நலக்குறைவால் ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
1932ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி கேரளாவில் உள்ள பாலக்காடு பகுதியில் பிறந்த சேஷன், சென்னை எம்.சி.சி. கல்லூரியில் இயற்பியல் பட்டம் பெற்றார். பின்னர் இந்திய ஆட்சிப் பணியில் தேர்ச்சிப் பெற்று, பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் இருந்துள்ளார்.
1990ஆம் ஆண்டு இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையராக பணியாற்றத் தொடங்கிய சேஷன், இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கான அதிகாரங்களைக் கண்டெடுத்த பிதாமகனாகக் கருதப்படுகிறார். தேர்தல் விதிமீறல்களைக் கட்டுப்படுத்தும் வகையில் வலிமையான சட்டங்களைக் கொண்டுவந்த பெருமைக்குச் சொந்தக்காரர்.
தேர்தல் ஆணையம் என்பது வலிமைமிக்க அரசியல் சாசன அமைப்பு என்பதை நாட்டிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய சேஷன், ஆசியாவின் நோபல் பரிசு எனப்படும் ரமோன் மகசேசே விருதைப் பெற்றுள்ளார்.
சேஷன் மறைவுக்குப் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில், இந்தியாவின் தலைசிறந்த குடிமைப் பணியாளரான சேஷன் கொண்டுவந்த தேர்தல் சீர்த்திருத்தங்கள் இந்திய ஜனநாயகத்தை வலிமைப்படுத்தியுள்ளது. அவரின் மறைவு வருத்தமளிக்கிறது. அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார். அதேபோல் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் சசி தரூரும் தனது ட்விட்டர் பதிவில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சேஷன் கொண்டுவந்த முக்கிய நடவடிக்கைகள்:
- தேர்தல் நடத்தை விதிமுறைகளைத் தீவிரப்படுத்தியவர்
- வாக்காளர் அடையாள அட்டையைக் கொண்டுவந்தவர்
- வேட்பாளர் தேர்தல் செலவுகளைக் கட்டுக்கொள் கொண்டுவந்தவர்
- சுவர் விளம்பரம், சுவரொட்டிகளுக்குக் கட்டுப்பாடு கொண்டுவந்தவர்.