சென்னை: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முன்னாள் மத்திய புலனாய்வுப் பிரிவு அலுவலர் ரகோத்தமன் இன்று காலமானார்.
இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ரகோத்தமன் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலை பட்டப்படிப்பை முடித்தவர். கல்லூரி படிப்பின் போதே அண்ணாமலை நியூஸ் என்ற வார இதழில் ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார்.
பின்னர் 1968ஆம் ஆண்டு உதவி ஆய்வாளராக சிபிஐயில் பணிக்கு சேர்ந்துள்ளார். முன் அனுபவம் இல்லாத காரணத்தினால் ராஜஸ்தானில் உள்ள தேசிய போலீஸ் அகாடமியில் ஒரு வருடமாக பயிற்சி மேற்கொண்டுள்ளார்.
பின்னர் சிபிஐயில் லஞ்ச ஒழிப்பு, பொருளாதார குற்றப்பிரிவு, வங்கி மோசடி, சிறப்பு புலனாய்வு குற்றப்பிரிவு என பல துறைகளில் பணியாற்றி உள்ளார். முக்கிய அரசியல் தலைவர்கள், அரசு அலுவலர்கள் தொடர்புடைய வழக்குகளையும் கையாண்டவர் ரகோத்தமன்.
'ராஜீவ் காந்தி கொலையை நியாயப்படுத்தி பேசிய சீமான்' - காங்கிரஸார் புகார்!
குறிப்பாக 1991ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் நடந்த குண்டுவெடிப்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமைப் புலனாய்வு அலுவலராக ரகோத்தமன் நியமிக்கப்பட்டார். 10 வருடங்களாக இந்த வழக்கை விசாரித்து முக்கிய குற்றவாளிகளை கைது செய்தவர். சிபிஐ அலுவலராக 36 வருடங்கள் பணியாற்றிய இவர், 2004 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். இவர் சிறப்பாக பணிபுரிந்ததினால் மெச்சதகுந்த பணிக்கான விருதை 1988ஆம் ஆண்டும், ஜனாதிபதி விருதை 1994ஆம் ஆண்டு பெற்றார்.
ஓய்வுக்குப் பின்னர் ரகோத்தமன் மனித வெடிகுண்டு குறித்த ஆவண படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல், ராஜீவ் காந்தி கொலை வழக்கு குறித்த ‘ராஜீவ் கொலை வழக்கு - மர்மம் விலகும் நேரம்’ என்ற புத்தகத்தை எழுதி தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் வெளியிட்டுள்ளார்.