சென்னை: கடந்த 2012ஆம் ஆண்டு, இயக்குநர் ஷங்கர் இங்கிலாந்திலிருந்து இருந்து ‘ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்’ மாடல் சொகுசு காரை இறக்குமதி செய்து, கே.கே.நகர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவுசெய்ய சென்றபோது, நுழைவு வரி செலுத்த வேண்டுமென வணிக வரித்துறை உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஷங்கர் தொடர்ந்த வழக்கில், 15 சதவீத நுழைவு வரியை செலுத்தி விட்டு, வாகனத்தை பதிவு செய்துகொள்ள மேற்கொண்டு உத்தரவிடப்பட்டது.
முடிந்தது ஷங்கர் வழக்கு
அதன்படி குறிப்பிட்ட தொகையை செலுத்தி காரை பதிவு செய்து பயன்படுத்தி வரும் நிலையில், ஷங்கர் தொடர்ந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது ஷங்கர் தரப்பில், 'நுழைவு வரி வசூலிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு, நுழைவு வரி செலுத்தும்படி 2019 செப்டம்பர் 20ஆம் தேதி வணிக வரித்துறை நோட்டீஸ் அனுப்பியதால், பாக்கித் தொகை 37 லட்சத்து 40 ஆயிரத்து 979 ரூபாயை அதே அண்டு செப்டம்பர் 28ஆம் தேதி செலுத்தி விட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இயக்குநர் சங்கர் தொடர்ந்த வழக்கை முடித்து வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதற்கிடையில், இறக்குமதி கார்களுக்கு விதிக்கப்பட்ட நுழைவு வரியை எதிர்த்து தொடரப்பட்ட அனைத்து வழக்குகளின் விவரங்களையும் அறிக்கையாக தாக்கல் செய்ய வணிக வரித்துறை ஆணையருக்கு நேற்று (ஆக. 13) உத்தரவிட்டது. அதன்படி, வழக்குகளின் விவரங்களை அலுவலர்கள் சேகரித்து வருகிறார்களா என அரசு தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
அரசு பதில்
அதற்கு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இன்று (ஆக. 14) பதிலளித்தார். அதில், "உயர் நீதிமன்ற உத்தரவிற்கு பின் வணிக வரித்துறை உதவி ஆணையர்கள் ஆகியோரை உள்ளடக்கிய வாட்ஸ் அப் குழு ஒன்றை தொடங்கியது. அதன்மூலம், வழக்குகளின் விவரங்களை சேகரிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு வணிக வரித்துறை ஆணையர் தற்போது கோயம்புத்தூரில் கரோனா பரவல் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளதால் அறிக்கை தாக்கல் செய்ய சற்று கால தாமதம் ஏற்பட்டுள்ளது. உதவி ஆணையர்களிடம் தகவல் பெற்றவுடன், விரைவில் அறிக்கை தாக்கல் செய்யப்படும்" என்றார்.