சென்னை: இந்திய பொருளாதாரம் முதல் முறையாக தொடர்ந்து இரண்டு காலாண்டுகளாக, அதாவது 6 மாதங்களில் வளர்ச்சி சரிந்து பொருளாதார தேக்க நிலையை அடைந்துள்ளது. கரோனா பாதிப்பு காரணமாக நடப்பு 2020-21 நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 23.9 சதவிகிதம் சரிவை சந்தித்தது. தற்போது இரண்டாவது காலாண்டிலும் தொடர்ந்து சரிவை சந்தித்துள்ளது.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய பொருளாதார நிபுணர் நாகப்பன், "பொருளாதார சரிவு அதிர்ச்சி அளிக்கக் கூடியது இல்லை. இது அனைவரும் எதிர்பார்த்தது தான். சரிவு எதிர்பார்த்த அளவுக்கு மோசமாக இல்லை. ஆனால் கொண்டாடும் அளவுக்கு நல்ல வகையிலும் இல்லை. இருப்பினும், விரைவில் பொருளாதாரம் மீளும் என நம்பிக்கை அளிக்கும் வகையில் தகவல்கள் உள்ளன.
ஏப்ரல் மாதத்தில் ஒரு வாகனம் கூட விற்பனையாகாத நிலையில் இருந்தது, தற்போது சூழல் மாறியிருக்கிறது. தீபாவளி உள்ளிட்ட பண்டிக்கை கால விற்பனைகள் நிலைமையை மாற்றியுள்ளன. கடந்தாண்டு அளவுக்கு இல்லாவிட்டாடலும் 70-90 சதவிகிதம் வரை இயல்பு நிலையை எட்டியுள்ளது. வேலை இழப்பும் பெருமளவுக்கு இல்லை.
சாதாரணமான சூழலில் உற்பத்தி அதிகரித்து நுகர்வு குறைந்து ஏற்படும் பெருளாதார மந்த நிலையில் வேறு. அதனை சாதாரண தேக்க நிலை எனலாம். இப்போது உள்ளது பெருந்தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள தேக்க நிலை.
தேவை அதிகரிப்பதன் மூலமே மீண்டும் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த முடியும். தேவை அதிகரித்தால் தான் நுகர்வு அதிகரிக்கும். அடுத்தாண்டு இரண்டாவது காலாண்டுக்குள் கரோனாவுக்கான தடுப்பூசி கிடைக்கும் அல்லது மக்களுக்கு பரவலாக நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும் என்பதால் அந்த காலகட்டத்தில் நுகர்வு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு மேல் மெல்ல மெல்ல நிலைமை சீராகும். முழுமையாக பொருளாதார வளர்ச்சியை எட்ட 2-3 ஆண்டுகள் ஆகும்" எனத் தெரிவித்தார்.
கரோனா பாதிப்பு காரணமாகவே பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது நோய்த்தொற்று பாதிப்பு குறைந்து வருவதால் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் செல்வதாக மத்திய நிதித்துறை தெரிவித்துள்ளது. அனைத்து குறியீடுகளும் பொருளாதாரம் மீள்வதைக் காட்டுவதாக நிதித்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
இது தொடர்பாக பேசிய பொருளாதார நிபுணர், பேராசிரியர் ஆத்ரேயா, "பொருளாதார மந்த நிலை உண்மையானது தான். பொருளாதார சரிவு 23.9 விழுக்காட்டிலிருந்து 7.5 விழுக்காடாக குறைந்துள்ளதை மீட்சி என்று கூற முடியாது. ஆண்டு இறுதியில் பொருளாதாரம் 10 விழுக்காடு வரை சரிவடையும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
கரோனா பாதிப்பு காரணமாக பொருளாதாரம் சரிவடைந்துள்ளதாக கூறப்பட்டாலும், 2016 இல் எடுக்கப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கை தொடங்கியே பொருளாதாரம் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. தனியார் செலவு, அரசு செலவு, ஏற்றுமதி உள்ளிட்ட பொருளாதார வளர்ச்சிக்கான எந்தவொரு குறியீடுகளும் மீளவில்லை" என்று கூறினார்.
இதையும் படிங்க: கரோனாவால் கடும் வீழ்ச்சியைச் சந்தித்த விளம்பரத்துறை - விளம்பர முகவர்கள் வேதனை