சென்னை: தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் தடை உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரிய வழக்குகள், நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஆஷா அமர்வில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்குத் தொடர்பாக உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதில், உணவுப் பாதுகாப்பு விதிகளில், ஆவின் பால் மற்றும் பால் பொருட்களை கண்ணாடிப் பாட்டில்கள், பிளாஸ்டிக் கவர்கள், அலுமினியம் ஃபாயில்களில் அடைத்து விற்க அனுமதிப்பதாகவும், ஆவின் நிறுவனம் பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடிநீர் பாட்டில்கள் பயன்பாட்டைத் தவிர்க்க ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், சுற்றுலா தலங்கள், வழிபாட்டுத்தலங்கள் ஆகிய இடங்களில் குடிநீர் வழங்கல் இயந்திரங்களை நிறுவலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தியதற்காக 33.84 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தியதாக உணவுப் பாதுகாப்புச்சட்டத்தின்கீழ், குடிநீர் உற்பத்தி நிறுவனங்களுக்கு எதிராக 384 குற்றவழக்குகள் பதியப்பட்டு, 27.62 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், 363 உரிமையியல் வழக்குகளில் 54.70 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பால் உற்பத்தியாளர்களுக்கு எதிராக 13 குற்ற வழக்குகள் பதியப்பட்டு, 1.79 லட்சம் ரூபாய் அபராதமும், 492 உரிமையியல் வழக்குகளில் 61.10 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உடலுறவுக்கு முன் ஆதார் அட்டையை சரிபார்க்க வேண்டுமா..? நீதிமன்றம் கூறியது என்ன?