சென்னை: எம்ஜிஆர் நகரில் வசித்துவருபவர் ஜார்ஜ் பீட்டர். இவர் கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் எழுத்தாளராகப் (காவலர்) பணியாற்றிவருகிறார். நேற்று முன்தினம் (டிசம்பர் 22) காவல் நிலையத்தில் பணியை முடித்தவுடன், அவர் ஆன்லைன் புட் டெலிவரி செயலியின் மூலம் உணவு ஆர்டர் செய்துள்ளார். ஆர்டர் செய்யும்போது ஜார்ஜ் பீட்டர் குடிபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால், செயலியில் லொகேஷனை மாற்றிக் கொடுத்துவிட்டார். பின்னர் டெலிவரி ஊழியர் ஆர்டர் செய்த லொகேஷனிற்குச் சென்று ஜார்ஜ் பீட்டருக்கு போன் செய்துள்ளார். அப்போது, தான் எம்ஜிஆர் நகருக்கு ஆர்டர் செய்ததாகவும், தவறான லொக்கேஷனிற்குச் சென்றுவிட்டதாகக் கூறி டெலிவரி ஊழியருடன் ஜார்ஜ் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர் டெலிவரி ஊழியர் உணவை ஜார்ஜ் பீட்டர் வீட்டிற்குச் சென்று சப்ளை செய்தபோது தாமதமாக வந்ததாக டெலிவரி ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதினால், கோபத்தில் ஜார்ஜ் பீட்டர் உணவை குப்பையில் வீசியதாகக் கூறப்படுகிறது.
இதில் இருவருக்கு கைகலப்பாகி டெலிவரி ஊழியர் ஆத்திரத்தில் ஹெல்மெட்டால் ஜார்ஜ் பீட்டரை தாக்கியுள்ளார். காயமடைந்த ஜார்ஜ் பீட்டர் எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின்பேரில் ஜார்ஜ் பீட்டரை தாக்கிய டெலிவரி ஊழியரான கார்த்திக் வீராவை காவல் துறையினர் கைதுசெய்தனர். கைதுசெய்யப்பட்ட கார்த்திக் வீராவை நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: Sexual harassment: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை - கார் ஓட்டுநருக்கு ஆயுள் தண்டனை