ஊரடங்கு காலத்தில் அந்தமான், லட்சத்தீவுகளுக்கு உணவு தானியங்களை 12 கப்பல்கள் மூலமாக இந்திய உணவுக் கழகம் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக இந்திய உணவுக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில். “கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு தழுவிய முழு ஊரடங்கு அறிவித்ததிலிருந்து அந்தமான் - நிக்கோபார் மற்றும் லட்சத்தீவுகளுக்கு தங்கு தடையின்றி உணவு தானியங்களை கப்பல் மூலமாக வழங்குவதற்கான விவகாரத்தில் இந்திய உணவுக் கழகம் தனி கவனம் செலுத்தி வருகிறது.
3.8 லட்சம் மக்கள் தொகை கொண்ட அந்தமான் - நிக்கோபார் தீவுகளில் 16 ஆயிரத்து 350 ரேஷன் அட்டைதாரர்களும், 65 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட லட்சத்தீவுகளில் ஐந்தாயிரத்து 200 ரேஷன் அட்டைதாரர்களும் அன்றாட உணவு தானியங்கள் தேவைக்காக பொது விநியோக முறையையே (PDS) சார்ந்திருக்கிறார்கள்.
இவர்களுக்கு ஊரடங்கு காலத்திலும் தொடர்ந்து தானியங்கள் வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இந்திய உணவுக் கழகம் செய்துவருகிறது. இத்தீவுகள் இந்தியாவின் பிரதான நில பகுதியில் இருந்து தனித்து இருப்பதன் காரணமாக இந்த பகுதிகளுக்கு கடல் மார்க்கமாக மட்டுமே உணவு தானியங்கள் கொண்டு செல்ல முடிகின்றது.
அந்தமான் தீவில் போர்ட் பிளேரில் 7080 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட ஒரு சேமிப்பு கிடங்கும், லட்சத்தீவில் ஆண்ட்ரோத்தில் 2500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட ஒரு சேமிப்பு கிடங்கும் இந்திய உணவுக் கழகத்தின் வசம் உள்ளது. அந்தமான் யூனியன் பிரதேசத்திற்கு பிரதம மந்திரியின் கல்யாண் கரிப் அன்ன யோஜனா திட்டத்தின் (PMGKAY) கீழ் மூன்றுமாத ஒதுக்கீட்டான 913 மெட்ரிக் டன் அரிசியையும், லட்சத்தீவு யூனியன் பிரதேசத்திற்கு அதே திட்டத்தின் கீழ் 330 மெட்ரிக் டன் தானியத்தை இலவசமாக விநியோகிக்க மத்திய அரசு வழங்கியுள்ளது.
இவைமட்டுமல்லாது குடிபெயர்ந்த தொழிலாளர்களின் நலனைக் காப்பதை உறுதிசெய்யும் வண்ணம் மத்திய அரசு, "ஆத்ம நிர்பர் பாரத் திட்டம்" மூலம் யூனியன் பிரதேசங்களுக்கு உணவு தானியங்களை இலவசமாக ஒதுக்கீடு செய்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் 60 மெட்ரிக் டன் உணவு தானியங்களை அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கும், 22 மெட்ரிக் டன் உணவு தானியங்களை லட்சத்தீவுகளுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.