திருவொற்றியூர் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் காதர் மீரான், காவலர் சரவணன் ஆகியோர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்று கொண்டிருந்த ஒரு ஆட்டோவை அவர்கள் மடக்கி விசாரித்ததில், ஆட்டோவில் இருந்தவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் அவர்களை சோதனையிட்டதில், அவர்களிடமிருந்த இரண்டு கிலோ 650 கிராம் கஞ்சா சிக்கியது.
தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், அவர்கள் ராயப்பேட்டையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் கணேஷ், ஜெனீஷ், பிரேம், குணசேகர் எனத் தெரிய வந்தது. திருவொற்றியூர் செட்டித் தெருவில் வசித்து வரும் சூர்யா என்பவரிடமிருந்து விற்பனைக்காக கஞ்சா வாங்கி வந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அந்த வீட்டிற்குச் சென்று காவல் துறையினர் சோதனையிட்டதில், நான்கு கிலோ கஞ்சா பிடிபட்டது. இதையடுத்து சூர்யாவை காவல் துறையினர் கைது செய்தனர்.
திருவல்லிக்கேணியைச் சேர்ந்த சூர்யா, அண்மையில்தான் செட்டித் தெருவில் வந்து குடியேறியுள்ளார். அங்கிருந்து பலருக்கும் கஞ்சா விற்பனை செய்துள்ளார். மேலும், இவரது தந்தை பிரபல கஞ்சா வியாபாரி என்றும், கஞ்சா விற்றதால்தான் அவரும் தற்போது சிறையில் இருப்பதும் தெரிய வந்தது. ஐந்து பேரிடமிருந்து மொத்தமாக ஆறு கிலோ, 650 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த காவல் துறையினர், தொடர்ந்து, அவர்களை சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: வீட்டின் பூட்டை உடைத்து 60 சவரன் நகை கொள்ளை