அந்தமனில் அசானி புயல் காரணமாக அனைத்து சுற்றுலா தளங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால், சென்னை விமான நிலையத்திலிருந்து அந்தமான் செல்ல இருந்த சுற்றுலா பயணிகள் தங்களது பயண தேதிகளில் மாற்றம் செய்தனர். இந்த மாற்றத்தால், பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்ததால், சென்னையிலிருந்து அந்தமான் செல்லும் ஐந்து விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.
முன்னதாக, அந்தமான், நிக்கோபர் தீவுகளின் அருகே வங்கக் கடலின் தென் கிழக்குப் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகியது. அது அசானி புயலாக உருவாகி, அந்தமான், நிக்கோபா் பகுதிகளை தாக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது. இதன்காரணமாக அந்தமானில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களும் மார்ச் 19ஆம் தேதியிலிருந்து வரும் 22ஆம் தேதி வரை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
சென்னை -அந்தமான் பயணிகள் விமானம்
சென்னை விமான நிலையத்திலிருந்து அந்தமானுக்கு தினமும் 9 பயணிகள் விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்த விமானங்கள் மூலம் 1,500க்கும் மேற்பட்ட பயணிகள் சென்றுவருகின்றனர். இந்த நிலையில் சென்னை விமானநிலையத்திலிருந்து இன்று காலை 4.35 மணி, 7.10 மணி, 8.30 மணி, 8.45 மணி, 10.45 மணிக்கு அந்தமான் புறப்படக்கூடிய 5 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மீதமுள்ள 4 விமானங்களில் பயணிகள் சென்றுவரவுள்ளனர்.
இதையும் படிங்க: சென்னை-சீரடி விமானம் திடீர் ரத்து; பயணிகள் அவதி!