சென்னை: சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின்போது தாக்கல்செய்யப்பட்ட 2021-22 வரவு-செலவுத் திட்ட அறிக்கையில், நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பல்வேறு அறிவிப்பினை வெளியிட்டார்.
அதில், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் அனைத்து மாவட்ட தலைமையகங்களிலும், ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நகரங்களிலும் காற்று தர கண்காணிப்பு நிலையங்கள் நிறுவப்படும் என அறிவித்திருந்தார்.
17 மாவட்டங்களில்...
அதனை நிறைவேற்றும்விதமாக இந்தியாவின் முதல் 'ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் கண்காணிப்பு மையம்' அமைக்கவும், 17 மாவட்ட தலைமையகங்கள், நகரங்களில் 64 கோடி ரூபாயில் காற்று தர கண்காணிப்பகம் அமைப்பதற்காக ஆணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி தருமபுரி, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகர்கோவில், பெரம்பலூர், சிவகங்கை, தென்காசி, தேனி, திருவாரூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், ஆவடி, தாம்பரம், கும்பகோணம், ஈரோடு, காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் காற்று தர கண்காணிப்பகம் அமைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றின் வாயிலாக ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் கண்காணிப்பு மூலம் காற்றின் தரம், நீர் தரம், திடக்கழிவு மேலாண்மை போன்றவற்றை இணையம் வாயிலாகக் கண்காணிக்கப்படுவதோடு, அபாயகரமான கழிவுகள், உயிரி-மருத்துவக் கழிவுகள், மின் கழிவுப் பொருள்கள், காற்று மற்றும் நீர் தர கண்காணிப்பு, தொழிற்சாலைக் கழிவுகள், சுத்திகரிப்புப் பணிகள், நதிகள் மாசு உள்ளிட்டவற்றை கண்காணிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.