சென்னை சேத்துப்பட்டு வைத்திய நாதன் தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (36). இவர் நேற்று (மே.18) மதியம் இருசக்கர வாகனத்தில் சென்னை அமைந்தகரை புல்லா அவென்யூ பகுதியில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அடையாளம் தெரியாத 4 பேர் இருசக்கர வாகனத்தில் வந்து ஆறுமுகத்தை வழிமறித்து அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடி விட்டனர். தகவல் அறிந்து அமைந்தகரை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உயிருக்கு போராடிய ஆறுமுகத்தை சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி ஆறுமுகம் இறந்து போனார்.
அமைந்தகரை போலீசார் விசாரணையில், ஆறுமுகத்தின் மீது கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் ஆயுத தடை சட்டத்தின் கீழும், டிபி சத்திரம் காவல் நிலையத்தில் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழும் வழக்குகள் என மொத்தம் 5 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.
ஆறுமுகத்தை அடையாளம் தெரியாத கும்பல் வெட்டிவிட்டு தப்பி ஓடுவதை அந்த வழியாக காரில் சென்றவர் செல்போனில் எடுத்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. என்ன காரணத்திற்காக ஆறுமுகம் கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதே பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
கொலை வழக்குப்பதிவு செய்த அமைந்தகரை போலீசார் வீடியோவை வைத்து விசாரணை நடத்தினர். கொலை செய்யப்பட்ட ஆறுமுகம் பைனான்ஸ் தொழில் நடத்தி வருவது தெரியவந்தது. அண்ணா நகர் 8ஆவது குறுக்கு தெருவில் உள்ள அவரது பைனான்ஸ் அலுவலகத்திற்கு தனது நண்பர் ரமேஷுடன் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது ஒரு கும்பல் பின் தொடர்ந்துள்ளது. இதனையறிந்த ஆறுமுகம் அதிவேகமாக புல்லா அவென்யூ வழியாக தப்பி செல்ல முயன்றபோது நிலை தடுமாறி கீழே விழுந்ததாக தெரிகிறது. உடனே கும்பல் இறங்கி ஓட ஓட ஆறுமுகத்தை வெட்டி கொலை செய்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் ஆறுமுகம் சரித்திர பதிவேடு ரவுடியான தட்சிணா மூர்த்தியிடம் கடந்த 10 வருடங்களாக கூட்டாளியாக இருந்துவிட்டு, சமீபத்தில் ரவுடியான காக்கா தோப்பு பாலாஜி கூட்டாளியாக சேர்ந்திருப்பது தெரியவந்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். இதனால் தட்சிணா மூர்த்தி கூட்டாளிகள் குறித்த பட்டியலை போலீசார் சேகரித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் பைனான்ஸ் விடும் ஆறுமுகம் பல பேரிடம் மிரட்டி அதிக வட்டி வாங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், அதில் ஏற்பட்ட பகை காரணமாக கொலை நடந்திருக்கலாம் எனவும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
கொலை நடந்த இடத்திற்கு அருகேயுள்ள சிசிடிவி காட்சிகளை தனிப்படை போலீசார் கைப்பற்றி கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். குறிப்பாக ஊடகங்களுக்கு சிசிடிவி காட்சிகள் கிடைக்க கூடாது என்பதற்காக டிவிஆர் கருவியை போலீசார் கடை கடையாக சென்று எடுத்து சென்றுள்ளனர்.
இதையும் படிங்க: KGF பட பாணியில் போலீசாருக்கு மிரட்டல்... கைது செய்த சில மணிநேரத்தில் ஜாமீன்... கதறும் காவல் துறை!