தமிழ்நாடு முழுவதும் 38 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தலும், 18 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தலும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்காளர்களும் தங்களது வாக்கினை ஆர்வத்துடன் பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை வளசரவாக்கத்தில் உள்ள குட் ஷெப்பர்டு பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்வதற்காக நடிகர் சிவகார்த்திகேயன் அவரது மனைவியுடன் வருகை தந்தார். ஆனால், அப்பகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடியில் அவரது பெயர் இல்லாததால் அவருக்கு வாக்கு இல்லை எனத் தேர்தல் அலுவலர்கள் தெரிவித்திருந்தனர்.
இதனால், நடிகர் சிவகார்த்திகேயனுக்கு வாக்கு இல்லையா என்ற செய்தி ஊடகங்களில் வைரலாகியது. வாக்கு இல்லை என்ற செய்தியை அறிந்த சிவகார்த்திகேயன் மனம்தளராது தனது பெயர் வேறு ஏதாவது வாக்குச்சாவடியில் இடம்பெற்று இருக்கிறதா என ஆராய்ந்தார்.
இதைத்தொடர்ந்து, மற்றொரு வாக்குச்சாவடி மையத்தில் தனது பெயர் இடம்பெற்றிருந்ததை தெரிந்துகொண்ட அவர் தனது வாக்கினை பதிவு செய்து ஜனநாயகக் கடமையை ஆற்றினார். இதையடுத்து, தனக்கு வாக்கு இல்லை என்ற செய்திக்கு முற்றிப்புள்ளி வைக்கும் விதமாக தான் வாக்களித்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டார். அத்துடன் வாக்களிப்பது உங்களது உரிமை. உங்கள் உரிமைக்காக நீங்கள் போராடுங்கள் எனவும் பதிவிட்டார்.
சிவகார்த்திகேயனைப் போலவே, நடிகர் ரமேஷ் கண்ணா மற்றும் ரோபோ சங்கர் ஆகியோரது பெயர் வாக்காளர்கள் பட்டியலில் இல்லாததால் அவர்களுக்கு வாக்கு இல்லை என தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர் என்பது குறிப்பிட்டத்தக்கது.