இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "2021 ஜனவரி 1ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. 2021 ஜனவரி 1ஆம் தேதியன்று 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம்.
அதற்கான வரைவு வாக்காளர் பட்டியல் வரும் நவம்பர் மாதம் 16ஆம் தேதி வெளியிடப்படும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் உள்ளிட்ட பணிகளுக்குரிய விண்ணப்ப படிவங்களை வரும் நவம்பர் 16ஆம் தேதிமுதல் டிசம்பர் 15ஆம் தேதிவரை பூர்த்திசெய்து அளிக்கலாம்.
விண்ணப்பங்கள் மீதான பரிசீலனைகள் அனைத்தும் ஜனவரி 5ஆம் தேதிக்குள் முடிக்கப்படும். அதன் பின்னர் இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 15ஆம் தேதி வெளியிடப்படும். வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கல் விண்ணப்பங்களை வாக்குச்சாவடி அலுவலர், தேர்தல் நடத்தும் அலுவலர், தேர்தல் நடத்தும் உதவி அலுவலரிடம் வேலை நாள்களில் பூர்த்திசெய்து அளிக்கலாம்.
விண்ணப்பங்களை அளிப்பதற்காகச் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். அதற்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும். வாக்காளர்கள் விண்ணப்பப் படிவத்துடன் முகவரிச் சான்று, வயது ஆகியவற்றுக்கான ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
சான்று ஆவணமாக கடவுச்சீட்டு, ஓட்டுநர் உரிமம், குடும்ப அட்டை, குடிநீர், தொலைபேசி, மின்சாரம், எரிவாயு ரசீது, வங்கி, அஞ்சல் அலுவலக சேமிப்புக் கணக்குப் புத்தகம் உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒன்றின் நகலை ஆவணமாகக் கொடுக்கலாம்.
வயதுச் சான்றின் ஆவணமாக பிறப்புச் சான்றிதழ், பள்ளிச் சான்றிதழை அளிக்கலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் பணிகளை மேற்கொள்ள www.nvsp.in என்ற இணையதளத்தை அணுகவும்.
2021 ஜனவரி 1ஆம் தேதியன்று 18 வயது பூர்த்தியாகி வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாவிட்டால் அவர்களும் விண்ணப்பத்தைப் பூர்த்திசெய்து அளிக்கலாம்.
வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்து வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல் இருந்தால் அவர்கள் படிவம் 001 என்பதை வட்டாட்சியர் அலுவலகம், மண்டல அலுவலகத்தில் (சென்னை மாநகராட்சிக்கு மட்டும்) சமர்ப்பிக்கலாம்" என அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: வக்ஃபு வாரிய இறுதி வாக்காளர் பட்டியல் நாளை வெளியீடு!