திருவள்ளூர் மாவட்டம் அகரம் கண்டிகையைச் சேர்ந்த விவசாயி கார்த்திக், தனது தோட்டத்தில் விளைந்த காய்கறிகளை இருசக்கர வாகனத்தில் வைத்து விற்பனைக்காக சந்தைக்கு எடுத்து வந்துள்ளார். அப்போது, வெங்கல் காவல்துறை ஆய்வாளர் காய்கறிகளை சந்தைக்கு எடுத்துச் செல்ல அனுமதிக்காததால், யாருக்கும் இனி பயன்படாத காய்கறிகளை விவசாயி கார்த்திக் சாலையில் கொட்டினார்.
இதையடுத்து, காவல்துறையினர் கார்த்திக்கை காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். காய்கறிகள் கொட்டப்படும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதை அடுத்து மாலையில் அவர் விடுவிக்கப்பட்டார். இதையறிந்த திருவள்ளூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன், பாதிக்கப்பட்ட விவசாயி கார்த்திக் இல்லத்திற்கு ஆய்வாளருடன் சென்று வருத்தம் தெரிவித்ததோடு, அப்துல் கலாமின் புத்தகத்தையும் பரிசாக வழங்கினார்.
இதுகுறித்து வெளியான செய்தி அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த மாநில மனித உரிமைகள் ஆணைய பொறுப்புத் தலைவர் துரை. ஜெயச்சந்திரன் மற்றும் உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ் அமர்வு, இதுகுறித்து திருவள்ளூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விரிவாக விசாரணை நடத்தி இரண்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: ’மக்கள் இப்படி செய்வார்கள் என கனவிலும் நினைக்கவில்லை’ - டாக்டருடைய நண்பரின் உருக்கமான வீடியோ!