சென்னை: அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழுவின் தலைவர் பெருமாள் பிள்ளை ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திடம் கூறியதாவது, "கரோனாவால் உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தனின் மனைவிக்கு அரசு வேலை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனே உத்தரவிட வேண்டும். தமிழ்நாட்டில் 19 ஆயிரம் அரசு மருத்துவர்களின் பிரச்சனை தீர்க்கப்படாமல் இருக்கிறது.
கடந்த 13 ஆண்டுகளாக ஒற்றை கோரிக்கையை முன்வைத்து நாங்கள் சளைக்காமல் போராடி வருகிறோம். கடந்த 2 ஆண்டுகளாக மேலும் 9 கோரிக்கைகளை இணைத்து, 10 அம்சக் கோரிக்கைகளை முன்னெடுத்து சென்று கொண்டிருக்கிறோம். கரோனா தொற்றால் உயிரிழந்த அரசு மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு, மாநில அரசு தனது பங்காக பத்து பைசா கூட கொடுக்க முன்வரவில்லை.
பணியின்போது அரசு மருத்துவர்கள் உயிரிழந்தால், கருணை அடிப்படையில் ஒரு வேலை கூடவா தரக்கூடாது?. கோவிட் முதல் அலையின்போது, அரசு மருத்துவர்களே மக்களுக்கு வரப்பிரசாதமாக இருந்தனர்.
அப்படிப்பட்ட கொடூரமான முதல் அலையின் போது உயிரிழந்தவர் தான் மருத்துவர் விவேகானந்தன். அவரது மறைவுக்கு பின்னால் இறந்துபோன தனியார் மருத்துவர்கள் 34 பேருக்கு திமுக அரசு, கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 25 லட்சம் ரூபாய் வீதம் வழங்கியது. ஆனால் மருத்துவர் விவேகானந்தன் உள்ளிட்ட அரசு மருத்துவர்களுக்கு நிவாரணம் கொடுக்கவில்லை. அரசு மருத்துவர்கள் என்ன பாவம் செய்தார்கள்?.
கடந்த 2 அலைகளின் போதும், ஏழரை கோடி தமிழ்நாடு மக்களை காப்பாற்ற, கடுந்தவம் செய்தது அரசு மருத்துவர்கள் தானே?. அப்படிப்பட்ட அரசு மருத்துவர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றி, அரசு அவர்களுக்கு கைமாறு செய்திருக்க வேண்டும்.
திவ்யா விவேகானந்தனுக்கு அவரது கல்வித் தகுதிக்கேற்ற வேலை கேட்டு, சுகாதாரத் துறை அமைச்சரை 14 முறைக்கும் மேலாக சந்தித்து மன்றாடி விட்டோம். திவ்யாவும் அவரது குழந்தைகளுடன் அமைச்சரை சந்தித்து மன்றாடி விட்டார். சுகாதாரத் துறை செயலாளரை கணக்கற்ற முறை சந்தித்து மன்றாடி விட்டோம். தர்ணா, உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என அனைத்தையும் நடத்தியும் விட்டோம். இனியும் என்ன தான் அரசு மருத்துவர்கள் செய்வது?.
இருப்பினும், கரோனாவால் உயிரிழந்த அரசு மருத்துவர்களின் குடும்பத்தினரின் கண்ணீருக்கும், தமிழ்நாட்டில் உள்ள 19 ஆயிரம் அரசு மருத்துவர்களின் உணர்வுகளுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிச்சயம் மதிப்பளிப்பார் என்று நம்புகிறோம்" என்றார்.
இதையும் படிங்க: 800 அரசு மருத்துவர்களை பணிவரன்முறை செய்க - மு.க. ஸ்டாலினுக்கு கோரிக்கை