சென்னை: புரசைவாக்கம் டாக்டர் ராஜா அண்ணாமலை சாலையில் இயங்கி வரும் பஞ்சாப் நேஷனல் வங்கி கிளைக்கு வந்த, பானுமதி, சாவித்திரி, பிரசாத் மேத்யூ என்ற மூவர், மத்திய பிரதேசம் போபாலில் இயங்கி வரும் திலீப் பில்டு கான் நிறுவனம் (Dileep BuildCon Ltd) என்ற நிறுவனத்தின் காசோலை ஒன்றை கொடுத்துள்ளனர்.
அந்த காசோலையில் குறிப்பிடப்பட்ட ரூ. 9 கோடியே 99 லட்சத்து 91 ஆயிரம் என்ற தொகையை சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையிலுள்ள ராம் சரண் என்ற நிறுவனத்திற்கு மாற்ற வேண்டும் என சமர்ப்பித்ததுள்ளனர். திலீப் பில்டு கான் நிறுவனம் என்பது மத்திய பிரதேச மாநிலம் போபாலில் இயங்கிவரும் மிகப் பிரபலமான நிறுவனம். நெடுஞ்சாலை, மேம்பாலங்கள் மிகப்பெரிய கட்டடங்கள் போன்ற கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தின் பெயரில் வந்த காசோலை என்பதாலும், மிகப் பெரிய தொகை என்பதாலும் வங்கி ஊழியர் சற்று சந்தேகமடைந்தார். பின்னர், காசோலை எண்ணை வைத்து அந்நிறுவனத்திற்கு மின்னஞ்சல் (Mail) மூலம் விவரங்களை கேட்டுள்ளார். இதற்கு, இந்த காசோலை எண் 2018ஆம் ஆண்டு பரிவர்த்தனை செய்யப்பட்டது போபாலிலுள்ள அந்நிறுவனத்தில் இருந்து வந்த பதில் வந்தது. இதனை போலியாக யாரோ பயன்படுத்துகிறார்கள் எனவும் தெரிவித்தனர்.
மோசடியில் ஈடுபட்ட 9 பேர் கைது
இதையடுத்து காசோலையை கொண்டு வந்த நபர்களுக்குத் தெரியாமல் பஞ்சாப் நேஷனல் வங்கி மேலாளர் ரவிகுமார் கீழ்பாக்கம் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுக்க, அடுத்த சில மணி நேரத்திலே உதவி ஆணையர் ரமேஷ் தலைமையிலான காவல் துறையினர் வங்கிக்கு வந்தனர். வங்கியில் காசோலையை மாற்ற முயன்ற பானுமதி, சாவித்திரி, பிரசாத் மேத்யூ மூவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.
மேலும், இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த அகீம் ராஜா, நாராயணன், அஜித்குமார், கோபிநாதன், செந்தில்குமார், முருகன் உள்பட மொத்தம் 9 பேரையும் கைது செய்தனர். மோசடியில் கைது செய்யப்பட்ட முருகன் என்பவர் தொண்டாமுத்தூர் பகுதியில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருவது தெரியவந்தது.
தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், போபாலிலுள்ள திலீப் பில்டு கான் கட்டுமான நிறுவனம் பல்வேறு நிறுவனங்களுடன் தொழில் தொடர்பில் உள்ளதால், அடிக்கடி பரிவர்த்தனை நடப்பதை அறிந்து, அந்த நிறுவன காசோலையை திருடி முத்திரை, கையெழுத்து உள்ளிட்டவற்றை போலியாக பயன்படுத்தி வங்கி கணக்கில் இருந்து 10 கோடி ரூபாய் பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மோசடி குறித்து தீவிர் விசாரணை
மேலும், விஜயகுமார் என்பவர் தங்களிடம் அணுகி நிறுவனம் ஒன்றில் 10 கோடி ரூபாய் காசோலையை செலுத்தி தந்தால் 11 லட்சம் தருவதாக கூறியதன் அடிப்படையில் அண்ணா சாலையில் உள்ள ராம் சரண் கோ நிறுவனத்தின் உரிமையாளருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், அவருக்கு 5 கோடி ரூபாய் தருவதாக ஒப்புக்கொண்டு வங்கியில் 10 கோடி ரூபாய் காசோலையை செலுத்த வந்ததாகவும் கைது செய்யப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இந்த குற்றச்சம்பவங்களில் தொடர்புடைய 7 பேர் தலைமறைவாகவுள்ள நிலையில் அவர்களைத் தேடும் பணியில் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தலைமறைவாகவுள்ள ஏழு பேரில் சென்னை தொழிலதிபர் கௌஷிக், மூளையாக செயல்பட்ட இர்பான் உள்பட 7 பேரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட மோசடி கும்பல் மீது பொய்யான ஆவணங்களை புனைந்து மோசடி செய்வது, கூட்டுச்சதி, குற்றம் செய்ய முயற்சித்தல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், எழும்பூர் நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மத்திய குற்றப்பிரிவுக்கு மாறிய வழக்கு
தொடர்ந்து, இந்த விவகாரத்தில் கோடிக்கணக்கான ரூபாய் பணம் மோசடி, வெளிமாநிலத்தில் பிரபல கட்டுமான நிறுவனத்தின் காசோலையை தவறாகப் பயன்படுத்தியது, காவல் துறை அலுவலர் உடந்தையாக இருப்பது போன்ற விஷயங்கள் இருப்பதால்.
வழக்கின் தன்மை கருதி கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் இருந்து வழக்கானது மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, போபாலுக்குத் தனிப்படை விசாரணைக்குச் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: ரயில்வே துறையில் வேலை - ரூ.55 லட்சம் மோசடி