சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. ஆழ்ந்த தாழ்வு பகுதியாக இது வலுப்பெற்றுள்ள நிலையில் தமிழ்நாடு முழுக்க மழை தீவிரமாக பெய்து வருகிறது.
இன்று இரவிற்குள் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறவும், இதனால் வட தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இச்சூழலில் தமிழ்நாடு மழை குறித்து தனியார் வானிலை ஆர்வலர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் ட்வீட்டில், "மேகங்கள் சென்னையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது. இதனால் கடலூர் - சென்னை - ஸ்ரீஹரிகோட்டா பெல்ட்டில் நாளை மதியம் வரை தீவிர கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
காரைக்கால் - நாகை பெல்டில் மேகங்கள் இல்லை. அந்த மேகங்கள் தற்போது நகர்ந்து கடலூர் - சென்னை பெல்டிற்கு சென்றுவிட்டது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் தூரமாகவே இருக்கிறது. ஆனால் இது நகர தொடங்கிய பின் மேக கூட்டங்கள் கடலூர் - சென்னை - ஸ்ரீஹரிகோட்டா பெல்ட் பக்கம் வந்துவிடும். கீழே இருக்கும் புகைப்படங்கள் உங்களுக்கு அனைத்தையும் விளக்கும்.
சென்னையில் விரைவில் மழை தொடங்கும். காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் ஒரு பகுதி மேகம் சென்னையை நோக்கி நகர்ந்து வருவதால் இசிஆர், சிறுசேரி பகுதிகளில் முதலில் மழை தொடங்கும். அதன்பின் நகரின் மற்ற பகுதிகளில் மழை பெய்யும். அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்கள் முடிந்த அளவு வீட்டிற்கு சீக்கிரம் செல்லுங்கள்.
இது வெறும் விழிப்புணர்வு போஸ்ட்தான். அதிகாரப்பூர்வ வானிலை மைய தகவலையும், அரசின் அறிவிப்புகளையும் பின்பற்றி பாதுகாப்பாக இருங்கள். இன்றும், நாளையும் உங்கள் கைபேசி, மடிக்கணினி ஆகியற்றவை முழு சார்ஜ் போட்டு வைத்துக்கொள்ளுங்கள்," என்று அறிவுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: மணவாழ்க்கையைத் தொடங்கிய மலாலா!