சென்னை: எம்ஜிஆர் பாடலுக்கு நடனமாடிய நரிக்குறவ மக்களின் 4 ஏக்கர் நிலத்தை அபகரித்து விட்டதாக பாதிக்கப்பட்ட நரிகுறவர்கள் சமூகத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த வழக்கறிஞர் ஸ்ரீதர், "முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் நடித்த "நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க" என்ற பாடலில் நடித்த நரிகுறவர்கள் சமூகத்தை சேர்ந்த பாயம்மா, லட்சுமி மற்றும் ஆப்பிள் ஆகியோருக்கு இலவசமாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சோழவரம் பகுதியில் 5 ஏக்கர் நிலம் அரசு சார்பில் ஒதுக்கப்பட்டது.
பின்னர் இவர்களால் இந்த இடத்தை பராமரிக்க முடியாத காரணத்தினால் விற்பனை செய்து, அந்த பணத்தை தனது சொந்தங்களுக்கு பிரித்து கொடுக்க முடிவு செய்து, அதே இனத்தை சேர்ந்த கார்த்திகேயன் என்பவரை அனுகியுள்ளனர்.
ஒரு ஏக்கர் 80 லட்சம் என மொத்தமாக 5 ஏக்கர் நிலத்தை நிதிஸ் ஜெயின் என்பவர் வாங்க தயாராக இருப்பதாகவும், முதலில் பொது அதிகாரம் மாற்ற வேண்டும் என இவர்களிடம் கார்த்திகேயன் அசல் பத்திரங்களை வாங்கி 5 ஆயிரம் ரூபாய் கொடுத்து அனுப்பியுள்ளார்.
நீண்ட நாட்களாகியும் அசல் பத்திரத்தை தராமல் கார்த்திகேயன் நரிகுறவர்களை ஏமாற்றி வந்ததால், சந்தேகமடைந்து விசாரித்த போது நிதிஸ் ஜெயின் பெயருக்கு 4 ஏக்கர் நிலம் மாற்றப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்த இவர்கள் பணத்தை கேட்டுள்ளனர். அப்போது பணத்தை தர மறுத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
நிலத்தை அபகரித்த கார்த்திகேயன் மற்றும் நிதிஷ் ஜெயின் ஆகியோர் மீது சோழவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததற்கு, ஆவடி மத்திய குற்றப்பிரிவிற்கு சென்று புகார் கொடுக்கும்படி போலீசார் தெரிவித்தனர். அதன்படி ஆவடி மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லாததால், அதை பற்றி கேட்டதற்கு ஆள் பற்றாக்குறை எனக்கூறி போலீசார் அலைக்கழிக்கின்றனர்" என்றார்.
உடனடியாக தங்களுடைய நிலத்தை மீட்டுத்தர வேண்டும் என டிஜிபியிடம் புகார் அளித்துள்ளதாக பாதிக்கப்பட்ட லட்சுமி என்பவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அமைந்தகரையில் பைனான்சியர் வெட்டிக் கொலை