சென்னை: ஸ்ரீவைகுண்டம் தொகுதியின் அதிமுக வேட்பாளரான முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதனின் வேட்புமனு ஏற்கப்பட்டதை ரத்துசெய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இது தொடர்பாக எம். சங்கர சுப்பிரமணியன் என்பவர் தொடர்ந்த வழக்கில், முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் வேட்புமனுவுடன் தாக்கல்செய்த ஆவணங்களில், தனது குடும்பத்தினர் சொத்து மதிப்பைக் குறைத்துக்காட்டுவதற்காக, குடும்ப உறுப்பினர் விவரங்களை முழுமையாகத் தெரிவிக்கவில்லை.
பல்வேறு தகவல்களை மறைத்துள்ளதாக ஸ்ரீவைகுண்டம் தேர்தல் அலுவலரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல், அவரது வேட்புமனுவை ஏற்றுக்கொண்டதாகக் குற்றஞ்சாட்டியிருந்தார்.
எனவே, சண்முகநாதன் வேட்புமனு ஏற்கப்பட்ட உத்தரவை ரத்துசெய்ய வேண்டுமெனவும், வேட்பாளர் பட்டியலிலிருந்து அவர் பெயரை நீக்க உத்தரவிட வேண்டுமெனவும் மனுவில் கோரிக்கைவைத்திருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வேட்புமனு நிராகரிப்பு, திரும்பப் பெறும் கால அவகாசம் முடிந்து, இயந்திரத்தில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணிகளும் முடிந்துவிட்ட நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றம் தலையிட முடியாது எனவும், தேர்தல் முடிவுகள் வந்தபிறகு தேர்தல் வழக்காகத் தொடர அறிவுறுத்தி வழக்கை நீதிபதிகள் முடித்துவைத்தனர்.