சென்னை: வண்ணாரப்பேட்டை 49வது வார்டு மாநகராட்சி தேர்தலின் போது, வார்டை கைப்பற்றி திமுகவினர் சிலர் கள்ள ஓட்டு போட முயற்சிப்பதாகக் கூறி அதிமுகவினருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அதிமுகவினர் இணைந்து கள்ள ஓட்டு போட முயன்றதாகக் கூறி திமுக உறுப்பினர் ஒருவரைப் பிடித்து அவரை அரை நிர்வாணப்படுத்தி தாக்கியுள்ளனர்.
வழக்குப் பதிவு
பின்னர், கள்ள ஓட்டு போட முயன்ற நபரை பிடித்து கொடுத்தும் எந்த விதமான நடவடிக்கையும் காவல் துறையினர் எடுக்கவில்லை என ஜெயக்குமார் உள்பட அதிமுகவினர் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். திமுகவினரை தாக்குவது தொடர்பான காணொலி சமூக வலைதளங்களில் பரவியது.
திமுக உறுப்பினரை தாக்கியது தொடர்பாக திமுகவைச் சேர்ந்த நரேஷ், தண்டையார்ப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், ஜெயக்குமார் உள்பட 40 அதிமுகவினர் மீது கொலை மிரட்டல், பயங்கர ஆயுதங்களுடன் கலகத்தில் ஈடுபடுதல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
மேலும், அத்துமீறி சாலை மறியலில் ஈடுபட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் உள்பட 113 பேர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் ராயபுரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது
திமுக உறுப்பினரை தாக்கிய வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை, பட்டினப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் காவல் துறையினர் கைது செய்தனர். கைது செய்வதற்கு முன்னதாக ஜெயக்குமாரின் வீட்டைச் சுற்றி 100க்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டனர். இதனையடுத்து வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சுந்தரவதனம் தலைமையிலான காவலர்கள் ஜெயக்குமாரை கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஜெயக்குமாரை கைது செய்யும் போது ஏற்பட்ட வாக்குவாதம் தொடர்பான காணொலியை அவரது மகன் ஜெயவர்தன் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதில் துணை ஆணையர் சுந்தரவதனம், மயிலாப்பூர் உதவி ஆணையர், இரு ஆய்வாளர்கள் ஜெயக்குமாரை கைது செய்ய அழைக்கின்றனர்.
இதற்கு, அத்துமீறி காவல் துறையினர் கைது செய்ய முயல்வதாக ஜெயக்குமாரின் மனைவி காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். பின்னர், ஜெயக்குமார் மீது காவல் துறையினர் பதிவு செய்துள்ள எஃப்.ஐ.ஆரை (FIR) படித்து காட்டிய பின்பு, நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி ஜெயக்குமாரை கைது செய்து அழைத்துச் செல்வது போல் காணொலி காட்சியில் பதிவாகி உள்ளது.
தொண்டர்கள் சாலை மறியல்
இதனையடுத்து உடனடியாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் குவிந்த அதிமுக தொண்டர்கள் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். காவல் துறையினர் அவர்களை அப்புறப்படுத்தினர்.
கைது செய்யப்பட்ட ஜெயக்குமாரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. பின்னர், ஜெயக்குமாரை எழும்பூர் நீதிமன்றத்தில் முன்னிறுத்த திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: ஸ்டாலின் வீட்டை முற்றுகையிட்ட ஏபிவிபி அமைப்பினர் 32 பேருக்குப் பிணை