பேரவையில் அறநிலையத் துறை மானியக் கோரிக்கை விவாதம்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (செப்டம்பர் 4) இந்து சமய அறநிலையத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. சுற்றுலா மற்றும் தொழிலாளர் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு அமைச்சர்கள் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிடுகின்றனர்.
நீதிமன்றத்தில் முன்னிலையாகும் மீரா மிதுன்
நடிகை மீரா மிதுன் மீது நேற்று (செப்டம்பர் 3) நீதிமன்றத்தில் 30 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல்செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று (செப்டம்பர் 4) அவரை காவல் துறையினர் நீதிமன்றத்தில் முன்னிறுத்தவுள்ளனர்.
கோடநாடு வழக்கு விசாரணை
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு குறித்து நேற்று எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் விசாரணை நடத்தியுள்ள நிலையில், தற்கொலை செய்துகொண்ட தினேஷ் குமாரின் தந்தை போஜன் உள்பட பலரிடம் விசாரணை நடைபெறவுள்ளது.
புதிய கல்விக் கொள்கை குறித்து ஆலோசனை
புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று சந்திக்கவுள்ளார்.
ஆண்டிபட்டி - தேனி இடையே ரயில் சோதனை ஓட்டம்
மதுரை - போடி அகல ரயில் பாதை அமைக்கும் திட்டத்தில், ஆண்டிபட்டி - தேனி ரயில் நிலையங்களுக்கு இடையே இன்று மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் இன்ஜினை இயக்கி சோதனை ஓட்டம் நடைபெறவுள்ளது.
மழை பெய்யக்கூடிய மாவட்டங்கள்
வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக இன்று நீலகிரி, தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன்கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.