சென்னை: சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தின் வழியாக செல்லும் கோவை – பெங்களூரு சாலையில் இரவு நேர போக்குவரத்து தடை தொடர்பான வழக்கில், ஈரோடு மாவட்ட ஆட்சியர் ஹெச். கிருஷ்ணன் உன்னியின் பதில் மனுவை அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
அதில், "ஏற்கனவே, உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், மாவட்ட ஆட்சியரின் போக்குவரத்து வாகன தடை குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இந்த சாலையில் 24 இடங்களில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளது. தாளவாடி, பவானிசாகர், கொள்ளேகால் கிராமங்களை இந்த சாலை இணைக்கிறது.
இரு மாநில விவகாரம்
22 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் விளைபொருட்களைச் சந்தைக்கு கொண்டு செல்ல இந்த சாலையை பயன்படுத்துகின்றனர். இரவு நேர போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டதால் வாகன நெரிசல் ஏற்பட்டு கல்லூரி மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
பள்ளி, பேருந்துகள் மாணவர்களின் வீடுகளைச் சென்றடைவதில் காலதாமதம் ஏற்படுகிறது. நோயாளிகள் மருத்துவமனை சென்றடைவதிலும் தாமதம் ஏற்படுகிறது. தமிழ்நாடு – கர்நாடகா என இரு மாநிலங்கள் சம்பந்தப்பட்டுள்ளதால் விரிவான கலந்தாலோசனை மேற்கொள்ள வேண்டியுள்ளது" என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இந்த வழக்கில் ஈரோட்டைச் சேர்ந்த கண்ணையன் என்பவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், கோவை - பெங்களூரு சாலையில், ஒவ்வொரு ஐந்து கிலோமீட்டர் தூரத்திற்கும் கண்காணிப்பு கேமரா பொருத்துவது சாத்தியமா? என தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கோவை - பெங்களூரு சாலையில் கேமரா பொருத்துவது சாத்தியமா? உயர் நீதிமன்றம்