சென்னை: இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திமுகவின் தேர்தல் பரப்புரையில் தங்களது கட்சி ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்தே நீட் தேர்வு ரத்து என்பதுதான் என்று கூறியது. இந்தத் தேர்வை ரத்து செய்யும் வழிமுறைகள் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், இப்போதைய முதலமைச்சருமான ஸ்டாலினுக்கு நன்றாகவே தெரியும் என்று திமுக இளைஞர் அணித் தலைவர் முதல் கடைக்கோடி பேச்சாளர் வரை தேர்தல் மேடைகளில் முழக்கமிட்டு தேர்தலில் வெற்றியும் பெற்றுவிட்டனர்.
நான் கடந்த ஜூன் மாதம் சட்டப்பேரவையில் நீட் தேர்விற்கு தமிழ்நாடு மாணவர்கள் தயாராக வேண்டுமா? வேண்டாமா? என்று தெளிவாகவும் நேரடியாகவும் பதில் சொல்லுங்கள் என்று கேள்வி எழுப்பினேன். அதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நீதியரசர் ஏ.கே. ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
அதன் பரிந்துரையின் பேரில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொன்னார். இந்த குழுவிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் மனு தாக்கல் செய்த திமுக, நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்புகளை மட்டுமே இந்தக் குழு ஆராயும். இதனால் நீட் தேர்வு நடைபெறுவதற்கு எந்தவிதமான இடையூறும் ஏற்படாது என்று தெரிவித்தது.
இதன்காரணமாக குழுவிற்கு எதிரான மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட மு.க. ஸ்டாலின் நீட் தேர்வு ரத்தா இல்லையா என்பதை கூறாமல், “பாதம் தாங்கிகள், எதிர்கட்சியானப் பிறகும் பாஜகவின் அடிமைகள்’’ என்றெல்லாம் அரசியல் நாகரீகம் இன்றி, எங்கள் மீது பழி போட்டு மக்களை திசை திருப்பினார்.
வானத்தையே வில்லாக வளைப்போம் என்பது போல் ஏமாற்றும் விதத்தில் பேசியதன் விளைவு, நாம் இன்று மேலும் ஒரு மாணவரை நீட்டிற்கு தாரை வார்த்துள்ளோம். ஒரு அரசியல் கட்சியின் பொறுப்பான தலைவர், சமுதாயத்தில் எந்த ஒரு கருத்தையும் சொல்லும்போதும், அது சமுதாயத்தில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும், அதனால் ஏற்படும் சாதக பாதகங்கள் என்னென்ன என்பதை முன்கூட்டியே ஆராய்ந்து கூற வேண்டும்.
அதைவிடுத்து நீட் தேர்வு தமிழ்நாட்டில் நடைபெறாது என்று கூறியதால், மாணவர்கள் நீட்டிற்கு முழுமையாக தயாராகவில்லை. இதன் விளைவு சேலம் மாணவன் தற்கொலை. நீட் குறித்து, இந்த அரசு தெளிவான பதில் அளித்திருந்தால் ஒரு உயிர் பலியாகி இருக்காது. கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் போல், இன்று நீட் தேர்வு நடைபெறுகின்ற நிலையில், நாளை சட்டமன்றத்தில் நீட் தேர்வை எதிர்த்து இந்த அரசு தீர்மானம் கொண்டுவரப் போவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
நீட் தேர்வை திமுகவை போல் நாங்கள் அரசியலாக்க விரும்பவில்லை. இனியாவது மாணவர்களுக்கு நீட் தேர்வு பற்றிய உண்மையான நிலையை உணர்த்துங்கள். மகனை இழந்து தவிக்கும் பெற்றோருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் அவரது குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நீட் அச்சத்தால் மாணவர் தற்கொலை- முதலமைச்சர் வேதனை