சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில், கூட்டுறவுத்துறையின் மீதான மானிய கோரிக்கை விவாதம் இன்று (ஏப் 8) நடைபெற்றது.
இதில் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, “கடந்த அதிமுக ஆட்சியில் கூட்டுறவுத்துறையில் 780 சங்கங்களில் ரூ.482 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளது. ஒரே ஒரு நபர் மட்டும் தனது மனைவியின் பெயரில் ரூ.14 கோடி அளவுக்கு கடன் பெற்று இருக்கிறார்.
இது அமைச்சருக்கும் தெரியாமல் எப்படி நடந்து இருக்கும். மதுரை மாவட்டத்திலும் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. அதே போல அனைத்து மாவட்டங்களிலும் நடந்த முறைகேடு தொடர்பான பட்டியலும் உள்ளது” என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறும்போது, “கூட்டுறவுத் துறையில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து அந்த புகார்களின் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுத்துள்ளோம்” என்று தெரிவித்தார். இதைத்தொடர்ந்து பேசிய செல்லூர் ராஜூ, “யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுங்கள்” என்று தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்த ஐ, பெரியசாமி, “கூட்டுறவுத் துறையில் நடந்த முறைகேடுகள் மற்றும் மோசடிகள் குறித்து விசாரிக்க, விரைவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் கலந்து ஆலோசித்து, முறைகேடு செய்த சட்டப்பேரவை மற்றும் மக்களவை உறுப்பினர்களை விசாரித்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சட்டப்பேரவையில் விவாதிக்க கண்டிஷன் போடக்கூடாது - சினம் கொண்ட ஈபிஎஸ்