"No power on earth can stop an idea whose time has come". பிரெஞ்சு தத்துவவாதியான விக்டர் ஹூயூகோவின் புகழ்பெற்ற வாசகம் இது. "ஒரு சிந்தனை (எண்ணம்) நடைமுறைப்படுத்தப்படுவதற்கான காலம் வந்துவிட்டது என்றால் அதை உலகின் எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது" என்பதே இதன்பொருள். இந்த மேற்கோளை இந்திய அரசியல்வாதிகளுக்கு வேறுவிதமாகப் பொருத்திப் பார்த்து அரசியல் விமர்சகர்கள் கூறுவது வழக்கம். "ஒரு இந்திய அரசியல்வாதியின் எண்ணத்தில் ஒரு மோசமான சிந்தனை வந்துவிட்டால் அது நடைமுறையாவதை எந்தச் சக்தியாலும் தடுக்க முடியாது: அடுத்து வருபவர் அதை இன்னும் மோசமாக்கி அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சென்றுவிடுவார்" என அரசியல் விமர்சகர்கள் கவலையுடன் தெரிவிப்பதுண்டு.
அதுபோன்ற சூழலைத்தான் தமிழ்நாடு அரசியல் களம் தற்போது கண்டுவருகிறது. ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, இலவச கலர் டிவி எனத் தொடங்கி, இலவச கிரைண்டர், மிக்ஸி, ஆடு, மாடு, லேப்டாப் என வளரத் தொடங்கி இப்போது குடும்பத் தலைவிக்கு மாதம் ரூபாய் ஆயிரம், ஆயிரத்து ஐநூறு, ஆறு இலவச எரிவாயு சிலிண்டர் என வந்து நிற்கிறது.
மகளிர் தினத்தை ஒட்டி குடும்பத் தலைவிகளுக்கு திமுகவும், அதிமுகவும் மாறி மாறி பரிசுப் பொருள்களை வாக்குறுதிகளாக அள்ளி வீசியுள்ளன. மகளிர் தினத்தின் முந்தைய நாளான மார்ச் 8ஆம் தேதி திருச்சி மாநாட்டில் உரையாற்றிய திமுக தலைவர் ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்தால் மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை அரசின் சார்பில் வழங்கப்படும் என்றார்.
பின்விளைவுகள் கவலையே!
இந்த அறிவிப்பை ஸ்டாலின் வெளியிட்டவுடன், ஸ்டாலின் உள்பட ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் மனத்தில் எழுந்த எண்ணம் ஒன்றாகத்தான் இருந்திருக்கும். இதற்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி அறிவிப்பாக என்ன செய்யப்போகிறார் என்பதுதான் அது. எடப்பாடியும் அந்த எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் ஸ்டாலின் சொல்லியதைவிட ஐநூறு ரூபாய் அதிகமாக்கி, அதிமுக ஆட்சிக்கு வந்தால் ரூ.1,500 குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் எனவும், போனசாக ஆண்டுக்கு ஆறு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசம் என தன் பங்கிற்கு மகளிர் தின அறிவிப்பை வெளியிட்டார்.
இருவரும் சேர்ந்து கூட்டணி வைத்து ஏன் ரூ.2,500 வழங்கக்கூடாது என மீம்ஸ்கள் சமூக வலைதளத்தில் பறந்தன. மேம்போக்கில், இரு கட்சிகளின் இந்தப் போட்டாபோட்டியை மக்கள் நகைச்சுவையாக வேடிக்கைப் பார்த்தாலும், இவை அவர்களுக்குத் தரப்போகிற பின்விளைவுகளைப் பற்றி பொருளாதார நோக்கர்கள்தான் கவலைப்படுகிறார்கள். இதில், வேடிக்கை என்னவென்றால், எங்களது யோசனையை இரு கட்சிகளும் காப்பி அடித்துவிட்டன என்று மக்கள் நீதி மய்யத்தின் கமல்ஹாசன் கூறியதுதான்!
தவறான முன்னுதாரணம்
சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை களைய, ஏழை மக்களுக்கு சமூக நல, விலையில்லாத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் எந்தத் தவறும் இல்லை. சமூகச் சமநிலையை ஏற்படுத்துவது அரசின் முக்கியக் கடமைகளுள் ஒன்று.
அதேவேளை, தேர்தல் காலத்தில் மக்களின் முகத்தில் நேரடியாகப் பணத்தைத் தூக்கி வீசி வாக்குகளை வாங்க வேண்டும் எனத் தமிழ்நாட்டின் இரு பெரும் அரசியல் கட்சிகள் கச்சைக் கட்டிக்கொண்டு களத்தில் இறங்குவது தவறான முன்னுதாரணமாகத் திகழும்.
மேலும், தற்போது ஆட்சியிலுள்ள அதிமுகவும், மீண்டும் ஆட்சிக்கு வந்தால், குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1,500 வழங்கப்படும் என்று அறிவித்திருப்பது முழுக்க முழுக்க தேர்தல் அரசியல் என்பதை வலியுறுத்தும்விதமாகவே உள்ளது.
நிதியாதாரம் எங்கே?
தேர்தலுக்கு முன் தமிழ்நாடு அரசு தாக்கல்செய்த பட்ஜெட்டில் வரும் நிதியாண்டின் அரசின் கடன் சுமை ரூ. 5.7 லட்சம் கோடியாக உயரும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில் தமிழ்நாட்டில் உள்ள சுமார் 2.5 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் ரூ.1,000 அல்லது ரூ.1,500, ஆறு இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் என்பதை வரும் ஆட்சியாளர்கள் நடைமுறைப்படுத்தினால் அதற்கான நிதியாதாரம் எங்கே என்ற கேள்விதான் அனைவரின் மனத்திலும் எழுகிறது. அது மறைமுகமாக மக்களின் மீதுதான் பாரமாக விழும் என்பதே யதார்த்தம்.
பெட்ரோலில் 63% தொகை வரி
இதற்கு "ஆல் இந்தியா மாடல்" ஒன்றையே உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். பொதுமக்கள் அனைவரும் புலம்புவது பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வைப் பற்றித்தான். இந்தியாவில் பெட்ரோலியப் பொருள்கள் மீது மத்திய, மாநில அரசுகள் வரிவிதித்து வருவாய் ஈட்டுகின்றன. ஆனால் கடந்த ஏழு ஆண்டுகளில் இந்த வரியானது பன்மடங்கு உயர்ந்துள்ளது.
2014ஆம் ஆண்டு மத்தியில் மோடி தலைமையிலான அரசு பதவியேற்கும் முன்னர் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 142 டாலராக இருந்தது. இப்போது 2021இல் சராசரியாக 52 டாலருக்கு விற்கப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை, முன்பிருந்ததைவிட சுமார் இரண்டரை மடங்கு விலை குறைவாக இருக்கும் நிலையிலும், 2014இல் விற்ற விலையைவிட தற்போதைய விலை அதிகமாக உள்ளது. அதற்குக் காரணம் வரிவிதிப்புதான். இப்போது பொதுமக்கள் வாங்கும் பெட்ரோலில் 63% தொகை வரி மட்டுமே எனப் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
மத்திய அரசின் லாவக யுக்தி
2014ஆம் ஆண்டுக்குப்பின் மட்டும் மோடி அரசு 20 லட்சம் கோடி ரூபாயை எரிபொருள் வரிகளின் மூலம் திரட்டியுள்ளது என, அரசின் தீவிர வரிவிதிப்பு நடைமுறை குறித்து காங்கிரஸ் மூத்தத் தலைவர் அஜய் மக்கான் குற்றஞ்சாட்டியுள்ளார். அஜய் மக்கானின் புள்ளிவிவரம் சற்று மிகைப்படுத்தப்பட்டதாக இருந்தாலும், குறைந்தபட்சம் 15 லட்சம் கோடி ரூபாயாவது மத்திய அரசு சார்பில் வசூலிக்கப்பட்டுள்ளதை புள்ளிவிவரங்கள் உறுதிப்படுத்துகின்றன.
இந்த வருவாயை வைத்துதான் இலவச கேஸ், உழவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 நிதி உதவி என மத்திய அரசு தனது அனைத்து மக்கள் நலத் திட்டங்களையும் செயல்படுத்திவருகிறது.
வாகனம் வைத்திருக்கும் நடுத்தர வர்க்க மக்களிடமிருந்து ராபின் ஹூட்போல பணத்தைப் பிடுங்கி, ஏழை மக்களின் நலத்திட்டங்களுக்குச் செலவிடும் லாவகமான யுத்தியை மத்திய அரசு செய்துவருகிறது என மூத்தப் பத்திரிகையாளர் சேகர் குப்தா தெரிவிக்கிறார்.
அதிர்ச்சி ஆய்வு
எனவே, அரசியல் கட்சிகள் இதுபோன்று அறிவிக்கும் கவர்ச்சிகரத் திட்டங்கள் மேம்போக்காகப் பார்ப்பதற்கு ஈர்ப்பதாகத் தென்பட்டாலும், யதார்த்தத்தில் மக்களுக்குப் பெரும் சுமையாக மாறிவிடும் என்ற அச்சம்தான் ஏற்படுகிறது.
பெண்களுக்கான அறிவிப்பு மற்றொரு விதத்திலும் மகளிர் முன்னேற்றத்திற்குப் பாதகமாக அமையும் வாய்ப்பு உள்ளது. இந்தியாவில் பெண்கள் வேலைக்குச் செல்லும் எண்ணிக்கை கடந்த இருபது ஆண்டுகளில் கணிசமாகக் குறைந்துவருகிறது என்ற அதிர்ச்சிக்குரிய ஆய்வை உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் ஐந்தில் ஒரு பெண் மட்டுமே வேலைக்குச் செல்லும் நபராக உள்ளார். ஏமன், ஈராக், ஜோர்டான், சிரியா, அல்ஜீரியா, ஈரான் போன்ற பின்தங்கிய ஆப்ரிக்க, அரபு நாடுகள் மட்டுமே இந்தியாவுக்குப் பிந்தைய இடங்களில் உள்ளன.
பெண்களின் கல்வியறிவு
வேலைக்குச் செல்லும் பெண் தொடர்பான குறியீட்டில் பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளைவிட பின்தங்கி தெற்காசிய பிராந்தியத்தில் மோசமான இடத்தில் இந்தியா உள்ளது.
கல்வியறிவு உயர வேலைவாய்ப்பு எண்ணிக்கையும் உயர வேண்டும். ஆனால், கடந்த 30 ஆண்டுகளில் இந்தியாவில் பெண்களின் கல்வியறிவு அதிகரித்துள்ள நிலையில், வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை 30.3 விழுக்காட்டிலிருந்து 20.5 விழுக்காடாகக் குறைந்துள்ளது.
கடந்த 20 ஆண்டுகளில், இந்தியாவில் பெண்கள் வேலைக்குச் செல்கிற நோக்கமும் சூழலும் மட்டுப்பட்டுவருகிறது என்பதையே இந்தப் புள்ளிவிவரங்கள் உணர்த்துகின்றன.
தமிழ்நாட்டுக்கு உகந்ததல்ல
இந்த மோசமான சூழலில் பெண்களை வேலைவாய்ப்பில் மேம்படுத்தும் ஆக்கப்பூர்வமான திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். அதைவிடுத்து, மாதந்தோறும் ரூ.1,000 அல்லது ரூ.1,500 போன்ற திட்டங்களை அறிவிப்பதால் எதிர்மறை விளைவுகள் ஏற்படுத்தும் அபாயமே அதிகமுள்ளது.
பிகார், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் போன்ற சமூக-பொருளாதார அலகுகளில் பின்தங்கிய மாநிலங்களில் இலவசத் திட்டங்கள் அறிவித்து சமூகச் சமநிலையை உருவாக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. ஒப்பீட்டளவில் இந்தியாவின் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் மேம்பட்டுள்ள தமிழ்நாட்டில் வளர்ச்சித் திட்டங்களை விடுத்து கவர்ச்சித் திட்டங்களை அறிவிப்பது மாநிலத்தை சமூகப், பொருளாதார நிலையில் உயர்வானதாகவும், உகந்ததாகவும் ஆக்காது.
பொறுப்பு
இலவசத் திட்டங்கள் அனைத்தும் மோசமில்லை. தேவைப்படுவோருக்கு மக்கள் நலத்திட்டங்களைக் கொண்டுசேர்ப்பது அரசின் கடமைதான். ஆனால், தேர்தல் வெற்றி ஒன்றையே நோக்கமாக வைத்து கவர்ச்சிகர வாக்குறுதிகளை அள்ளிவீசுவது, பின்னர் மக்களுக்கே கூடுதல் சுமையாக மாறி சமூக வளர்ச்சியைப் பின்னுக்குத்தள்ளும் அபாயத்தை ஏற்படுத்தலாம். அரசியல்வாதிகள் தங்கள் வெற்றியைக் குறியாக வைத்து செயல்படுவார்கள். மக்களும் தங்களுக்கு என்ன கிடைக்கும் என்பதை எதிர்நோக்கி இருப்பார்கள். ஆனால், எதிர்காலத்தையும், எதிர்விளைவுகளையும் சிந்தித்து சாதுரியமாகச் செயல்பட வேண்டிய பொறுப்பு அரசு, மக்கள் ஆகிய இருவரின் கைகளிலும்தான் உள்ளது.
இதையும் படிங்க: தேர்தல் 2021: உறவுக்குக் கை கொடுத்து, உரிமைக்குக் குரல் கொடுத்த கதை