தமிழ்நாட்டில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. இந்தத் தேர்தலில் அதிமுக, திமுக தலா 3 இடங்களில் போட்டியிட உள்ள நிலையில், இரு கட்சிகளும் ஓரிரு நாட்களில் வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய 10 ஆயிரம் ரூபாய் வைப்புத்தொகையும் (டெபாசிட்), 10 சட்டப்பேரவை உறுப்பினர்களின் முன் மொழிவும் அவசியம்.
இந்நிலையில், சுயேட்சை வேட்பாளர் பத்ம ராஜன் தலைமைச் செயலகத்தில் இன்று தேர்தல் அலுவலர், மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
அனைத்துத் தேர்தல்களிலும் தவறாமல் வேட்புமனு தாக்கல் செய்யும் தேர்தல் மன்னன் பத்மராஜன், தற்போது 214 ஆவது முறையாக வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். தனக்கு வெற்றி முக்கியமல்ல, தோல்வியே முக்கியம் என்று தெரிவித்த அவர், இந்தச் சாதனைகளுக்காக லிம்கா புத்தகத்தில் 3 முறை இடம்பிடித்துள்ளதாகவும், கின்னஸ் புத்தகத்தில் விரைவில் இடம்பெற உள்ளதாகவும் தெரிவித்தார்.
பத்மராஜன் இந்தியாவில் நடக்கும் எந்த தேர்தலையும் விடுவதில்லை. இவர், முன்னாள் பிரதமர்கள் நரசிம்மராவ், வாஜ்பாய், தேவகவுடா, மன்மோகன் சிங் ஆகியோரை எதிர்த்தும், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர்கள் கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா, கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்களை எதிர்த்தும் போட்டியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான வேட்புமனு தாக்கல் தொடக்கம்!