தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை நடத்துவதற்கான நடவடிக்கைகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
தமிழ்நாட்டில் தேர்தல் பணிகள்
தற்போது தமிழ்நாட்டில் 2021ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிப்புப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. அவை தவிர, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை தயார்படுத்துவது, கரோனாவுக்கு ஏற்றபடி வாக்குச்சாவடிகள் அமைப்பது உள்ளிட்ட பணிகள் குறித்து தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா, உயர் அலுவலர்களுடன் ஆய்வு நடத்தி வருகிறார்.
இந்நிலையில், முதல் கட்டமாக இந்திய தேர்தல் ஆணையம் இங்கு வந்து ஆய்வு மேற்கொள்ள உள்ளது. முக்கியமாக சட்டம் ஒழுங்கு பிரச்னை இல்லாத நிலையில்தான் தேர்தலை சுமுகமாக நடத்த முடியும். ஆகவே சட்டம் ஒழுங்கு பிரச்னைகள், பொதுப் பிரச்னைகள், தேர்தல் தயார்நிலை, அரசியல் கட்சிகளின் தேர்தல் தொடர்பான கோரிக்கைகள், கருத்துகள் ஆகியவற்றை அறிய தமிழ்நாட்டிற்கு உயர் மட்ட குழுவை இந்திய தேர்தல் ஆணையம் அனுப்புகிறது.
தேர்தல் ஆணையத்தின் உயர்மட்டக் குழு வருகை
இந்திய தேர்தல் ஆணையத்தின் பொதுச்செயலாளர் உமேஷ் சின்ஹா தலைமையிலான உயர் மட்டக் குழு வரும் 21ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு வரவுள்ளது. தமிழ்நாட்டின் மாவட்ட தேர்தல் அலுவலர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோருடன் உயர்மட்டக் குழு ஆலோசனை மேற்கொள்ளவுள்ளது.
முன்னதாக அன்று காலையில் அரசியல் கட்சி பிரதிநிதிகளை சந்தித்து கோரிக்கை மனுக்களைப் பெறுவார்கள். அரசியல் கட்சிகளை உயர்மட்டக் குழுவினர் தனித்தனியாக சந்திப்பார்கள் என்று கூறப்படுகிறது.
அதன் பின்னர் 22ஆம் தேதியில் தமிழ்நாட்டின் உயர் அலுவலர்களை சந்தித்து ஆலோசனை நடத்துவார்கள். இந்த கூட்டத்தில் தலைமைச் செயலர், உள்துறை கூடுதல் தலைமைச் செயலர், காவல் துணை கண்காணிப்பாளர், சென்னை காவல் ஆணையர் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர். தேர்தலுக்காக மாநில அரசு மேற்கொண்டுள்ள தயார் நிலை குறித்து இந்தக் கூட்டத்தில் ஆய்வு செய்வர்.
இதையும் படிங்க: ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு: தமிழ்நாட்டில்தான் கடைசி