மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் சொத்துவரி மற்றும் மின்கட்டண உயர்வு, மாநிலத்தில் அதிகரிக்கும் போதைப்பொருள்கள் பயன்பாடு, கோதாவரி - காவிரி நதி இணைப்புத்திட்டம் உள்ளிட்டவை குறித்துப்பேசியதாக தெரிவித்துள்ளார்.
டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (செப்.20)சந்தித்தார்.
அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, "மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்தோம். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. நான் முதலமைச்சராக இருக்கும்பொழுதே தமிழகத்தின் இரண்டு பிரதான கோரிக்கைகளை முன் வைத்திருந்தேன். அதில் கோதாவரி - காவிரி நதி இணைப்புத் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற கோரிக்கை வைத்தோம். இந்த திட்டத்தை நிறைவேற்றினால் விவசாயத்துக்குத் தேவையான போதிய அளவு நீர் கிடைக்கும்.
காவிரி நீரில் கலக்கக்கூடிய மாசுகளை அகற்றிவிட்டு, மீண்டும் அந்த நீரை காவிரி நீருடன் கலப்பது குறித்தான ஒரு கோரிக்கையினையும் வைத்திருந்தோம். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள், இளைஞர்கள் சீரழியும் நிலைக்குத் தள்ளப்பட்டதை எடுத்துச்சொல்லியுள்ளோம்.
போதை பொருள் பழக்கம் அதிகரித்துள்ளது. மாணவர்களுக்கு போதை பொருட்கள் தடை இன்றி கிடைக்கின்றது. தமிழ்நாட்டில் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இதனை மாநில அரசாங்கத்திடம் பலமுறை கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மத்திய உள்துறை அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளோம்.
தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, வழிப்பறி மற்றும் பாலியல் வன்கொடுமை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் அனைத்துத்துறைகளிலும் ஊழல் அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் பல விவகாரங்களை மத்திய உள்துறை அமைச்சர் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளோம்.
அமித் ஷாவிடம் அரசியல் குறித்துப்பேசவில்லை. பிரதமர் மோடியை சந்திக்க எந்த திட்டமும் இல்லை. அதிமுக விவகாரம் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் அது குறித்து கருத்து கூறுவது சரியாக இருக்காது.
20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் சென்று வந்துள்ளேன். தமிழ்நாட்டில் சொத்துவரி மற்றும் மின்கட்டண உயர்வு போன்ற விவகாரங்களை எடுத்துக்கூறிக் கொண்டுதான் வருகிறோம். கரோனா தொற்றில் இருந்து மக்கள் பொருளாதாரத்தில் தற்போதுதான் உயர்ந்துகொண்டு வருகின்றனர். இந்த நேரத்தில் அனைத்து துறைகளிலும் கட்டணத்தை உயர்த்துவது முறையாகாது" எனக் கூறினார்.
இதையும் படிங்க: இறுதி யுத்தத்திற்கு டெல்லி செல்லும் ஈபிஎஸ்..! கலக்கத்தில் ஓபிஎஸ்..! மத்தியில் ஆதரவு யாருக்கு?