தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சட்டப்பேரவையில் இன்றைய விவாதத்தின்போது வண்ணாரப்பேட்டை கலவரம் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று விளக்கம் அளித்துப் பேசினார்.
அப்போது, ' வண்ணாரப்பேட்டை இஸ்லாமிய மக்களிடம் காலை 11 மணியளவில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்த இருக்கிறீர்களா என்று காவல் துறையினர் கேள்வி எழுப்பி உள்ளனர். ஆனால், அவர்கள் இல்லை என்று கூறி மறுத்தனர். ஆனால், நண்பகல் ஒரு மணிக்கு 200க்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டம் நடத்தினர்.
அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்தியதால், காவல் துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். ஆனால், அவர்கள் போராட்டத்தைக் கலைக்க மறுத்து உள்ளனர். மேலும் அங்கு இருந்து ஒரு சில நபர்கள் பேருந்து ஒன்றையும் உடைத்து உள்ளனர். எனவே அவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர். ஆனால், மீண்டும் 6.30 மணிக்கு அனுமதி இல்லாமல் சாலை மறியலில் ஈடுபட முற்பட்டனர். தொடர்ந்து அங்கு இருந்த காவலர்கள் மீது கற்கள், செருப்பு போன்றவற்றால் தாக்கியுள்ளனர். எனவே, அங்கு இருந்த நபர்களைக் காவல் துறையினர் கைது செய்தனர்' என்றார்.