சென்னை: டெண்டர் முறைகேடுகள் மூலமாக வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உட்பட 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறை, வேலுமணி மற்றும் அவருக்குத் தொடர்புடைய இடங்களில், சோதனை நடத்தி, 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான வங்கி நிரந்தர வைப்பீடு ரசீதுகளை பறிமுதல் செய்தது.
சம்பந்தப்பட்ட வங்கிக்கணக்குகள் மற்றும் கே.சி.பி., இன்பிரா நிறுவனம் பெயரில் இருந்த, 109 கோடியே 12 லட்சம் ரூபாய் மற்றும் ஆலம் கோல்டு மற்றும் டைமண்ஸ் பெயரில் இருந்த 1 கோடியே 81 லட்சம் ரூபாய் வைப்புத் தொகைகள் விசாரணை அதிகாரியால் முடக்கப்பட்டன. லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றமும், நிரந்தர வைப்புத் தொகைகளை முடக்கி உத்தரவிட்டது. நிரந்தர வைப்பீடுகள் மீதான முடக்கத்தை நீக்கக்கோரிய மனுக்களை, சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
நடைமுறைப்படி தாக்கல் செய்ய அவகாசம்: இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை முடியும் வரை, நிரந்தர வைப்பீடுகளை முடக்கக்கோரி, லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி ஜே.ஓம் பிரகாஷ் முன் விசாரணைக்கு வந்தபோது, குற்றவியல் நடைமுறைப்படி மனு தாக்கல் செய்யப்படவில்லை என எதிர்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, குற்றவியல் நடைமுறைப்படி கூடுதல் மனு தாக்கல் செய்ய ஏப்ரல் 5ஆம் தேதி வரை அவகாசம் வழங்கிய நீதிபதி, அதுவரை சொத்துகளை முடக்கி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நீட்டித்து உத்தரவிட்டார்.