மாமல்லபுரத்தில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் பக்கிங்ஹாம் கால்வாயில் கொட்டப்பட்டு, கால்வாய் பகுதி குப்பைக் கிடங்காக பயன்படுத்தப்படுவதாக தனதேஜா வீட்டுமனை உரிமையாளர்கள் சங்கம் தரப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. மாசு கட்டுப்பாட்டு சட்டத்தின் விதிகளை பின்பற்றி குப்பைக்கிடங்கு அமைக்காதது குறித்து ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் மட்டுமே அனுப்பி உள்ளதாகவும், அதன்பின்னர் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அதன் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாமல்லபுரம் பேரூராட்சி தரப்பில், உலக பிரசித்திபெற்ற மாமல்லபுரம் பகுதியை சுகாதாரமான முறையில் பராமரித்து வருவதாகவும், குப்பைக்கிடங்கு அமைக்க மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் தடையில்லா சான்றும், அனுமதியும் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுப்பிய நோட்டீசுக்கு விளக்கம் அளித்துள்ளதாகவும், இன்னும் இறுதி முடிவெடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.
வழக்கு குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டது. பின்னர் நீதிபதிகள், வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களிலிருந்தே குப்பைக்கிடங்கு எவ்வாறு பராமரிக்கப்படுகிறது என தெரியவருவதாகவும், இதுகுறித்து விரிவான அறிக்கையை ஒருவாரத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விதிமீறல் நோட்டீஸ் மீது அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்காமல் ஆண்டுக்கணக்கில் கிடப்பில் போடக்கூடாது என மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு அறிவுறுத்தி, விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க: ரஷ்ய - உக்ரைன் போர்: குறைந்தது தங்கம் விலை