சென்னை: விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்துவது சரியா? குறிப்பிட்ட மதம் தொடர்பான வழக்குகளையெல்லாம் ஆர்எஸ்எஸ் மனப்பான்மை உடைய குறிப்பிட்ட நீதிபதியிடம் விசாரணை செய்ய அனுப்புவதன் பின்னணி என்ன? ஆகிய கேள்விகளை வினாவை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சனாதனத்தை அரசியலில் புகுத்தி, பிரிட்டிஷ் அரசின் பிளேக் தடுப்பு முயற்சியைக்கூட அரசியல் மூலதனமாக்கி, வைதீகத்தை நிலைநாட்டினார் பாலகங்காதர திலகர். பாமர மக்களிடையே,"மராத்தியத்தில் பெண்களைப் படிக்க வைத்தால் அவர்கள் பிறருடன் ஓடிவிடுவர்" என்ற அரிய வாதத்தினைக் கூறி, ஜோதிபாபூலே போன்றவர்களின் சமூக சீர்திருத்தத்திற்கு எதிராக வாதாடியவர் பாலகங்காதர திலகர் என்ற இந்து மராத்திய சித்பவன் பார்ப்பனர்!' எனக் குறிப்பிட்டுள்ளார்.
பிள்ளையார் அரசியலைத் தொடங்கியவர் திலகர் எனக் குறிப்பிட்ட அவர், பிள்ளையார் முன்பு பக்திக்குப் பயன்பட்ட நிலையில், இப்போது ஆர்எஸ்எஸ்-காரர்களால் அது அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டு வருவது நாடறிந்த உண்மையாகும் என்றார். மேலும், அவர்,"அன்றுமுதல் இன்றுவரை 2 ரூபாய்க்கும், 5 ரூபாய்க்கும் களிமண் பிள்ளையார் சிலைகளை விலைக்கு வாங்கி வந்து, அதனை வீட்டில் வைத்து கும்பிட்டுவிட்டு, பிறகு கிணற்றிலோ, குளத்திலோ போட்டுவிடும் பழக்கம் பக்திக்காரர்களுக்கு இருந்தது.
பிள்ளையார் அரசியல்: ஆனால், இதே பிள்ளையார் இன்று பக்திக்குப் பதிலாக, அரசியல் கட்சி, மத வெறுப்பினை பரப்ப, சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தி, அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டிலும் மதக் கலவரத்தைத் தூண்டும் அரசியல் ஆயுதமாக பாஜக - ஆர்எஸ்எஸ்-ஐ வளர்க்கவே ஒரு கோடி ரூபாய் செலவில் பிள்ளையார் சிலைகள் தமிழ்நாட்டை "ஆக்கிரமிக்கின்றன"; இது பிள்ளையார் அரசியல் - அரசியல் கட்சிகளை அச்சுறுத்த ஒரு புது வழி.
விநாயகர் சதுர்த்தி பிரதிஷ்டை மற்றும் பேரணி தொடர்பான வழக்குகளை விசாரிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தனி நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் ஆக.31-ல் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இதையடுத்து பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யவும், அவற்றை ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைக்கவும் அனுமதி கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மனுக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன.
இந்த கோரிக்கைக்காக ஆட்சியர் மற்றும் வருவாய் அதிகாரிகளை எதிர்மனுதாரர்களாக சேர்த்து ரிட் மனுவாகவும், போலீஸாரை எதிர்மனுதாரர்களாக சேர்த்து குற்றவியல் மனுக்களாகவும் தாக்கல் செய்யப்படுகின்றன. இதனால், விநாயகர் சதுர்த்தி தொடர்பான மனுக்கள் இரு வேறு நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு பட்டியலிடப்படுகின்றன.
பிள்ளையார் வழக்குகளை விசாரிக்க ஒரே நீதிபதி: இரு நீதிபதிகளும் வெவ்வேறான உத்தரவு பிறப்பிக்கும்போது அந்த உத்தரவை நிறைவேற்றுவதில் வருவாய்த் துறைக்கும், காவல் துறைக்கும் இடையே நிர்வாக ரீதியான பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதனால் விநாயகர் சதுர்த்தி தொடர்பான அனைத்து மனுக்களையும் ஒரே நீதிபதி விசாரிக்க ஏற்பாடு செய்யவேண்டும் என நிர்வாக நீதிபதி பி.என்.பிரகாஷிடம் கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன் கோரிக்கை வைத்தார்.
அறிவிக்கையின்படி நமக்கு சில சந்தேகங்கள் ஏற்படுகின்றன. நமக்கு மட்டுமல்ல, அண்மைக்காலங்களாக அங்கே நடைபெற்ற சில வழக்குகளில் இதற்கென எல்லா வழக்குகளையும் ஒரே நீதிபதியே விசாரிக்க வேண்டி, கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஏன் கேட்டார்? அது தமிழ்நாடு அரசையோ, சட்டத் துறையையோ, காவல் துறையின் தலைமையையோ அல்லது ஆட்சிக்குரிய தலைமைச் செயலாளரையோ சட்ட அமைச்சரையோ கலந்து பேசாமல் - உணர்ச்சி, சர்ச்சைகளையும் - சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளையும் உண்டாக்கும்.
இதில் எப்படி நீதிபதியிடம் வேண்டுகோள் வைத்தார் என்பது நமக்கும், நம்மைப் போன்ற மதச்சார்பின்மை கொள்கையாளர்களுக்கும் விளங்காததாக இருக்கிறது. குறிப்பிட்ட பிரச்சனை தொடர்பான வழக்குகள் எல்லாம் ஒரே நீதிபதியிடம் அனுப்ப வேண்டும்? அடுத்து, இதற்கான அறிவிப்பு ஆணையை, நிர்வாகப் பொறுப்பில் உள்ள மூத்த நீதிபதி பி.என்.பிரகாஷ், விநாயகர் சதுர்த்தி சம்பந்தமாக அந்த கிளைப்பிரிவில் ஏற்படும் வழக்குகளை (குற்றவியல் நடைமுறைச் சட்டம் 482 கிரிமினல் குற்ற வழக்குகள்) நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனே விசாரிப்பார் என்று வெளியிட்டு, அது கடந்த ஆக. 26ஆம் தேதி முதலே அமல்படுத்தப்படும் என்று அதில் கூறப்பட்டு இருக்கிறது.
அதே சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில், இத்தகைய கிரிமினல் வழக்குகளை விசாரிப்பதற்கு என்றே ஒரு நீதிபதி பொறுப்பில் உள்ளார். (நீதிபதி சிவஞானம் - Portfolio Judge) அவரிடமிருந்து அதை மாற்றிட ஒரே நீதிபதியிடம் விநாயகர் சதுர்த்தி சிலைகள் ஊர்வலம் குறித்து வரும் வழக்குகளை போட சொல்லப்பட்ட காரணம் சரியா.
நீதிபதி சுவாமிநாதன் சர்ச்சைகளுக்குள்ளானவர்: மேலும் பல வழக்குகள் வந்தால், அவை ஒரே மாதிரியானவையா? வெவ்வேறு சூழல், வெவ்வேறு நடப்புக்காகத் தானே, தன்மையானதாகவோ தானே இருக்க முடியும்? இந்த வழக்குகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், இதற்குமுன் கொடுத்த தீர்ப்புகளில், குறிப்பாக இந்து மதம் சம்பந்தப்பட்ட பல வழக்குகளில் எழுதிய தீர்ப்புகள் சர்ச்சைக்குரியதாக இருந்தது. அவர் முந்தைய அமர்வில் மாற்றப்படுவதற்கு ஒரு நாள் முன்புகூட, அவசரமாக உடனே விசாரித்து, உடனே ஜாமீன் என்றெல்லாம் தந்து பலவகை விமர்சனங்களுக்கு ஆளான நீதிபதி.
இந்த சந்தேகம் வருவதற்கான காரணமாக வெளிப்படையாக அவர் ஒரு ஆர்எஸ்எஸ் உணர்வாளர் என்பதுதான். வழக்கறிஞராக இருக்கும்போது அவர் எந்தக் கொள்கையை உடையவராக இருந்தாரோ, நீதிபதியான பிறகும், அதே உணர்வுடன் தீர்ப்புகள் ஒரு சார்பாகவும், தேவையற்று பெரியாரை குறித்தும், மற்றவர்கள் குறித்தும் வலிந்து எழுதப்பட்ட குற்றச்சாட்டுகளில் மக்கள் மன்றத்தில் விமர்சிக்கப்பட்டவர்.
நீதிபதியான பிறகும் தனது உணர்வை வெளியே அப்பட்டமாகக் காட்டிக் கொள்ளும் வகையில், இப்படி நடந்துகொண்ட ஒருவரிடம் வழக்குகள், அதுவும் இந்து முன்னணி, ஆர்எஸ்எஸ் வழக்குகள் போடப்பட்டால், அதில் சரியான நியாயம் கிடைக்குமா?. அரசின், காவல் துறையின் நடவடிக்கைகளை முடக்க இப்படி ஒரு திட்டம்.
சமூக அநீதி ஏற்படும்: தற்போது சென்னை உயர் நீதிமன்ற உயர் ஜாதி நீதிபதிகளின் எண்ணிக்கை நாளும் கூடி வருவதோடு, ஆர்எஸ்எஸ் தகுதியே பிரதானமாகி நியமனம் பெறும் நிலையும் வரும் (செப்டம்பரில்) ‘வளர்பிறையாகிறது.’ அதனால், சமூக அநீதியே ஏற்படக்கூடும் என்றும் இன்னும் சில நாள்களில் அமர்வுகளும் மாறக்கூடிய நிலையிலும், தலைமை நீதிபதி ஓய்வு பெறவிருக்கும் நிலையிலும், அவசர அவசரமாக - வழக்குகளே அது சம்பந்தமாக வராத நிலையிலும், ஏன் இதில் இவ்வளவு வேகம் - இந்த பிள்ளையார் வழக்குகளில் ஏன்? மனச்சாட்சி உள்ளவர்கள் பதில் கூறவேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்காக தயாராகும் மதுரை சிறைக் கைதிகளின் விதைப் பிள்ளையார்...