தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு காரணமாக பல அத்தியாவசிய கடைகள் , வணிக வளாகங்கள், திரையரங்குகள், டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் டாஸ்மாக் கடைகளில் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றுள்ளது.
இது தொடர்பாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மது பிரியர்களுக்கு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,''கரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவால் வணிக நிறுவனங்கள், டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுவிட்டன. இதனால் குடிமகன்கள் பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். வார்னிஷைக் குடிப்பது, ஆஃப்டர் ஷேவிங் லோஷனைக் குளிர்பானத்துடன் கலந்து குடிப்பது என்ற முறையில் உயிர்களைப் ப(லி)றிகொடுக்கும் மனிதர்களை நினைத்தால் ‘பகீர்’ என்கிறது.
இந்தப் பிரச்சினைக்கு மனநல மருத்துவமனைகளை விரிவாக்கலாம். போதை மறுவாழ்வு மையங்களின் (De-addiction Centre) மூலம் மதுவுக்கு அடிமையான குடிமக்களை (Alcohol Dependent Syndrome) கரையேற்ற வேண்டியது இந்தக் காலகட்டத்தில் கட்டாயம்.
குடிப்பிரியராகி, குடிவெறியர்களான அருமைத் தோழர்களே! உங்கள் குடும்பத்தையும் ஒரு கணம் எண்ணிப் பாருங்கள், இதுதான் சரியான சந்தர்ப்பம்! மனக் கட்டுப்பாட்டை கடைப்பிடித்தால் உங்கள் ஆயுளும் நீளும், உங்கள் குடும்பமும், சமூகமும் மகிழ்ச்சியில் திளைக்கும், உங்கள் பிள்ளைகளும் பண்பட்ட முறையில் படித்தவர்களாக சமூகம் மதிக்கும் ஒளிவாணர்களாகத் திகழ்வார்கள்.
மக்கள் நலனே தன் வாழ்வின் நலனாக 95ஆம் ஆண்டு வயதிலும் உழைத்த தலைவரின் தொண்டன் என்ற முறையில் சமூக நலக் கண்ணோட்டத்தோடு விடுக்கும் உருக்கமான வேண்டுகோள்" என குறிப்பிட்டுள்ளார்.