அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் தனி இட ஒதுக்கீடு வழங்குவதற்கும் மத்திய உள்துறை அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் வழங்கப்பட்டு வரும் இட ஒதுக்கீட்டை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் மருத்துவர் ரவீந்திரநாத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவ கல்லூரியை சுகாதாரத் துறையுடன் இணைப்பதற்கு அரசு வெளியிட்டுள்ள அரசு ஆணை வரவேற்புக்குரியது. ஆனால், அந்த மருத்துவக் கல்லூரியில் பயிலும் மருத்துவ மாணவர்களின் கல்வி கட்டணம் எவ்வளவு என்பதை இன்னும் தெளிவாக எடுத்துக் கூறவில்லை.
ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி, ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரி, ஈரோடு பெருந்துறை மருத்துவ கல்லூரி ஆகியவற்றில் பிற அரசு மருத்துவக் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கல்வி கட்டணத்தை வசூலிக்க அறிவிப்பு வெளியிட வேண்டும்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் தனி இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என மத்திய உள்துறை அமைச்சகம் கூறியிருப்பது கண்டனத்திற்குரியது. புதுச்சேரியில் 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கிட மத்திய அரசு அனுமதிக்க வேண்டும். தமிழ்நாட்டில் வழங்கப்படும் மருத்துவக் கல்வி இட ஒதுக்கீட்டை பாதுகாக்க நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
அரசு மருத்துவர்களுக்கு மருத்துவ மேற்படிப்புகளில் 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கிட தமிழ்நாடு அரசு சட்டம் கொண்டு வர வேண்டும். மத்திய அரசின் பட்ஜெட்டில் சுகாதாரத் துறைக்கு ஜிடிபியில் 6 விழுக்காடு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
மேலும், கரோனா தொற்று தடுப்பூசிக்கு தனி வரியைப் போடக்கூடாது. தடுப்பூசி போடுவதை விரைவுப்படுத்த வேண்டும், அதனை இலவசமாக அனைவருக்கும் வழங்க வேண்டும், தடுப்பூசிகளை பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழ்நாடு அரசு கரோனா வைரஸ் தடுப்பு பணியில் அலட்சியம் காட்டாமல், தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: விரைவில் 5ஜி சேவை - மத்திய அமைச்சர் ரவிசங்கர் உறுதி!