தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் 32 ஆவது பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள வெள்ளி விழா அரங்கில் இன்று நடைபெற்றது. இந்தப் பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்டு, மாணவர்களுக்கு பட்டங்களையும் பதக்கங்களையும் வழங்கினார். இதில் மருத்துவம், பல்மருத்துவம், இந்திய மருத்துவம் மற்றும் அதன் துணைப்படிப்புகள் ஆகியவற்றில் 16 ஆயிரத்து 866 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
விழாவில் பேசிய அணு அறிவியலாளர் சிதம்பரம், செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை, பல்வேறு துறைகளில் தற்போது பயன்படுத்தும் நிலை ஏற்பட்டிருக்கிறது என்றும், வருங்காலத்தில் மருத்துவ சேவைத் துறையில் இதன் பயன்பாடு கணிசமாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன், இந்திய மக்கள் தொகை அடிப்படையில் கணக்கிட்டால் தற்போதைய நிலவரப்படி 6 லட்சம் மருத்துவர்களும், 20 லட்சம் செவிலியர்களும் தேவைப்படுகின்றனர். ஆனால், அந்தளவிற்கு மருத்துவர்களையும் செவிலியர்களையும் நாம் உருவாக்க முடியாததற்கு, அதிகமான கல்வி கட்டணங்களும், தரமில்லாத மருத்துவக் கல்வியும்தான் காரணம்.
மேலும், புதிய கல்விக் கொள்கை கிராமப்புற மருத்துவ சேவையை மேம்படுத்தும் வகையிலும், கிராம மக்களுக்கு முழுமையான சுகாதார வசதிகள் கிடைக்கும் நோக்கிலும் அமைந்திருக்கிறது. நீட், எக்ஸிட் போட்டித் தேர்வுகள் நடத்தப்படுவது வரவேற்கக்கூடிய ஒன்று என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: அரசின் புள்ளிவிவரங்களில் நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும் - ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர்!