தமிழ்நாடு ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான பன்வாரிலால் புரோகித் நாகப்பட்டினத்தில் உள்ள, தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சுகுமாரை நியமனம் செய்துள்ளார். இவர் பதவி ஏற்பது முதல் மூன்று ஆண்டுகள் அந்தப் பதவியில் இருப்பார்.
பேராசிரியர் சுகுமார் 33 ஆண்டுகள் கற்பிக்கும் அனுபவம் கொண்டவர். தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் மீன் பதப்படுத்தும் தொழில் நுட்பத் துறை தலைவராக பணியாற்றிவந்தார். பல்கலைக்கழக மானியக் குழுவின் பட்டியலில், இவரின் 24 ஆய்வுக் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.
சர்வதேச அளவில் கருத்தரங்குகளில் 10 ஆய்வுக் கட்டுரைகளையும், தேசிய அளவிலான கருத்தரங்கில் 20 ஆய்வுக் கட்டுரைகளையும் சமர்ப்பித்துள்ளார். சர்வதேச மாநாடுகள் மூன்றையும், தேசிய அளவிலான மாநாடுகள் பதினொன்றையும் நடத்தியுள்ளார்.
எட்டு புத்தகங்களை எழுதியுள்ளார். முனைவர் படிப்பில் 5 மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார். மீன்வளத் துறையில் பல்வேறு உயர் பதவிகளை வகித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.