நவராத்திரி விழா கடந்த 17ஆம் தேதி தொடங்கி வரும் 25ஆம் தேதி வரை 9 நாட்கள் கொண்டாடப்படவுள்ளது. வீட்டிற்குள் படிக்கட்டுகள் அமைத்து அதில் கடவுளர், விலங்குகள், பறவைகள் என பல்வேறு பொம்மைகளும் வைக்கப்பட்டு கொலு கொண்டாடப்படும். இந்நாட்களில் கொலு பொம்மைகள் விற்பனை களை கட்டும். அதேபோல் தற்போதும் கொலு பொம்மைகளை மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.
எப்போதுமே பரபரப்பாக காணப்படும் மயிலாப்பூர் மாட வீதிப்பகுதியில், கொலு பொம்மை விற்பனை செய்யும் ஒரு கடையில், பணிபுரியும் ஊழியருக்கு சிலை செய்து கடையின் முன்பாக வைத்துள்ளார் அதன் உரிமையாளர். இது பலரையும் கவர்ந்துள்ளது. இதனை பார்க்கும் சிலர் உண்மையாகவே ஆள் ஒருவர் நிற்பதாக எண்ணி நகர்ந்து செல்கின்றனர். உண்மை அறிந்ததும் ஆச்சர்யத்தோடு செல்ஃபி எடுத்து கொள்கின்றனர்.
12 ஆண்டு காலமாக பணியாற்றிய ஊழியர் உமாபதிக்கு, தற்போது உடல் நிலை சரி இல்லாததால், அவரால் தொடர்ந்து பணியாற்ற முடியவில்லை. இதையடுத்து அவரது ஆசையை நிறைவேற்றும் வகையில், அவருக்கு சிலை வைத்ததாக பெருமிதப்படுகிறார் கடை உரிமையாளர் அசோக் குமார். ஒரு புகைப்படம் இருந்தாலே போதும், அதை அப்படியே சிலையாக செய்து விடுவோம் எனக்கூறும் அசோக் குமார், மண், பைபர் என அனைத்து வித சிலைகளும் செய்வதாகக் கூறுகிறார்.
தனக்கு சிலை வைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக நம்மிடம் தொலைபேசியில் தெரிவித்த ஊழியர் உமாபதி, தனது சிலை அருகில் நின்று பல பெண்கள் செல்ஃபி எடுத்து கொள்வதை வீட்டில் பார்த்து கிண்டல் செய்வதாகவும் வெட்கப்பட்டார். அடுத்த மாதத்திற்குள் உடல் நிலை சரியாகி மீண்டும் பணிக்கு வந்து விடுவேன் என்றும் நம்பிக்கையோடு தெரிவித்தார் உமாபதி.
இதையும் படிங்க: மீனாட்சியம்மன் திருக்கோயிலில் தொடங்கியது நவராத்திரி கொலு