சென்னை: அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் இரண்டாவது நாளாக நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டம் குறித்து மருத்துவர் ரவீந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர், 'மருத்துவ முதுகலைப் படிப்பிற்கான முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான கலந்தாய்வை உடனடியாக நடத்தக்கோரியும், உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கை விரைந்து நடத்த வேண்டும் எனவும் கடந்த இரண்டு நாள்களாகப் போராடி வரும் முதுகலைப் பயிற்சி மருத்துவர்களுக்கு சமூக சமத்துவ டாக்டர்கள் சங்கம் சார்பில் ஆதரவைத் தெரிவித்துள்ளோம்.
மேலும் பயிற்சி மருத்துவர்களின் உளரீதியான, உடல் ரீதியான பிரச்னைகளை போக்கும் வகையிலும், பணிச்சுமையை குறைக்கும் வகையிலும் இந்த விவகாரத்தில் மத்திய அரசும், உச்ச நீதிமன்றமும் தலையிட்டு கலந்தாய்வை விரைந்து நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனத் தெரிவித்தார்.
இதையடுத்து, முதுகலைப் பயிற்சி மருத்துவர் மோகனவேல், 'நாங்கள் முதுகலை மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வை உடனடியாக நடத்தக்கோரி இரண்டாவது ஆவது நாளாக இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.
தொடர்ந்து 5 நாள்களுக்கு மேலாக அகில இந்திய உறைவிட மருத்துவர்கள் சங்கத்தினர் கோரிக்கை நிறைவேற்றப்படாததால் நாளை (டிச.3) முதல் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் அவசர சிகிச்சை தவிர மற்ற அனைத்து மருத்துவ பணிகளையும் புறக்கணித்து போராட்டம் நடத்தப்படும் என அறவித்துள்ளனர்.
அவர்களின் பணி புறக்கணிப்பு போராட்டத்திற்கு பிறகு கோரிக்கை நிறைவேற்றப்படாமல் இருந்தால் ஒரு சில நாள்களுக்கு பிறகு நாங்களும் பணிகள் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம்.
மேலும், இந்தியா முழுவதும் 40 ஆயிரத்திற்கும் அதிகமான உறைவிட மருத்துவர்கள் உள்ளனர். இதில் தமிழ்நாட்டில் தான் அதிகளவில் ஆராயிரத்திற்கு அதிகமான உறைவிட மருத்துவர்கள் உள்ளனர்.
ஏற்கனவே மருத்துவர்கள் குறைவால் நோயாளிகள் பாதிக்கப்படும் நிலை தான் உள்ளது. நாங்கள் எங்கள் பணிகளை திறம்பட செய்வதற்கும், எங்களின் கோரிக்கையை நிறைவேற்றவும் தமிழ்நாடு அரசும், மத்திய அரசும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தடுப்பூசி போடலனா சம்பளம் இல்ல - மின்சார வாரியம் கொடுத்த ஷாக்