தலைமைச் செயலகத்தில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கரோனா தொற்று தடுப்புக்காக அமைக்கப்பட்ட 19 பேர் கொண்ட மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்தக் கூட்டத்தில், மே 17ஆம் தேதி ஊரடங்கு முடிவடையும் நிலையில், அடுத்தக்கட்டமாக எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் போக்குவரத்து, பள்ளிகள் இயக்கம் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.
இதில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் சண்முகம் சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். முதலமைச்சருடனான இடண்டு மணி நேர ஆலோசனைக்குப் பின்னர் மருத்துவ நிபுணர் குழு செய்தியாளர்களைச் சந்தித்தது.
அப்போது பேசிய ஐசிஎம்ஆர் துணை இயக்குநர் பிரதீப் கவுர், ”அதிகளவில் பரிசோதனை செய்வதாலேயே அதிக பாதிப்புகளை கண்டறிய முடிகிறது. எனவே, தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு அதிகரிப்பது குறித்து கவலை வேண்டாம். பணியிடங்களில் தனி மனித இடைவெளியை அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
கரோனா தொற்றுக்கு உள்ளானவர்களைக் கண்டறியும் பணி சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே அதிகமாக மருத்துவ பரிசோதனை நடந்தது தமிழகத்தில் தான். கரோனா உயிரிழப்பும் இங்கு மிக மிகக் குறைவாக உள்ளது.
கரோனா தொற்று முற்றிலும் இல்லை என்ற நிலை வராது. இருப்பினும், அப்பரவலைத் தடுப்பதில் மக்களின் ஒத்துழைப்பு மிக அவசியம்.
ஊரடங்கை ஒரு போதும் 100 சதவீதம் விலக்கிக் கொள்வதற்கான வாய்ப்பு தற்போது இல்லை. ஊரடங்கை படிப்படியாக வாபஸ் பெற வேண்டும்“ என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: 3 மாதங்களில் பொருளாதார மேம்பாட்டு அறிக்கை - சி. ரங்கராஜன் குழு தகவல்!