சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் அறிவியல் தொழில்நுட்ப உயர் ஆராய்ச்சி நிறுவனத்தின் 12ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் அந்நிறுவனத்தின் நிறுவனரும், வேந்தருமான ஐசரி கணேஷ் தலைமையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கினார்.
இவ்விழாவில், பாபா அணு ஆராய்ச்சி மைய இயக்குநர் பேராசிரியர் அஜித்குமார் மொஹந்தி, திரைப்பட இயக்குநர் சங்கர், கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, ராடிசன் ப்ளூ குழுமத்தலைவர் விக்ரம் அகர்வால் அகியோருக்கு 'மதிப்புறு முனைவர் பட்டம்' வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
இந்த கல்வியாண்டில் 68 தங்கப்பதக்கங்களும், 48 வெள்ளிப்பதக்கங்களும், 43 வெண்கலப்பதக்கங்களும் வழங்கப்பட்டது. மேலும் 4,011 இளநிலைப்பட்டங்களும், 583 முதுநிலைப்பட்டங்களும், 87 ஆய்வியல் நிறைஞர் பட்டங்களும், 148 முனைவர் பட்டங்களும் என 4,829 மாணவர்களுக்கும் பட்டங்கள் வழங்கப்பட்டன.
நிகழ்வில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில், “பட்டம்பெறும் மாணவர்களுக்கும், அதற்கு உறுதுணையாக இருந்த பெற்றோர், ஆசிரியர்களுக்கும் வாழ்த்துகள். 2047இல் சுதந்திரத்தின் நூற்றாண்டைக்கொண்டாடும்போது, உலகத்திற்கே நம் நாடு தலைமையாக இருக்கும். பட்டம்பெற்ற உங்களைப்போன்ற மாணவர்களின் பங்கு மிகப்பெரியதாக இருக்கும்.
கனவுகளை அடைய கடுமையாக உழைக்க வேண்டும். ஒரு காலத்தில் உணவுப்பற்றாக்குறை என்பது அதிகமாக இருந்தது. தற்போது நாம் அதை கடந்துவிட்டோம். இருப்பினும் பல நீண்ட தூரத்தைக் கடக்க வேண்டும். நாட்டின் 75ஆவது சுதந்திர தின விழா கொண்டாப்பட்டு வருகிறது. வீடுகள்தோறும் தேசியக்கொடி எனும் நிகழ்வை மக்கள் கொண்டாடி வருகிறார்கள்.
நீங்கள் யார் என்பதில் பெருமைகொள்ள வேண்டும். நாட்டின் சேவை, உங்களிடம் இருந்து தான் முதலில் தொடங்குகிறது. தனி மனித சாதனைகள் அனைத்தும் சேர்ந்து, நம் நாட்டை உயர்ந்த இடத்திற்கு எடுத்துச் செல்லும். ஒவ்வொரு மாணவரும் அவரவர் சாதித்தாலே ஒட்டு மொத்த இந்தியாவும் சாதித்ததாக இருக்கும்", எனத் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய, ''சுரேஷ் ரெய்னா நமது மூளைக்கு அமைதியை கொடுப்பது செஸ் விளையாட்டாகும். செஸ் ஒலிம்பியாட்டில் கலந்துகொண்டுள்ள அனைவருக்கும் எனது வாழ்த்துகள். சென்னைக்கு வருவதில் எனக்கு எப்பொழுதுமே மகிழ்ச்சி'' எனத் தெரிவித்தார்.
மேலும், இயக்குநர் சங்கர், ''இந்த முனைவர் பட்டம் எனக்கு இன்னும் ஊக்கத்தைக்கொடுக்கிறது. இன்னும் சினிமாவில் புதிய கலைகள் டெக்னாலஜிகளைக்கொண்டுவர இது ஒரு உத்வேகமாகவும், உற்சாகமாகவும் உள்ளது'' எனத்தெரிவித்தார்.
இதையும் படிங்க: சித்த மருத்துவத்தில் ஆராய்ச்சி மேற்கொள்ளும் சென்னை ஐஐடி - தேசிய சித்தமருத்துவ நிறுவனம் ஒப்பந்தம்