சென்னை: தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் அமைந்திருக்கும் கலைஞர் அரங்கில் நடைபெற்ற, திமுக துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை - தமிழ்ச்செல்வி ஆகியோரின் மகன் கலை கதிரவன் - சந்தியா பிரசாத் இணையரின் திருமணத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையேற்று இன்று (பிப். 20) நடத்தி வைத்தார். விழாவிற்கு தலைமையேற்ற ஸ்டாலின், மணமக்களை வாழ்த்திப் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது, ”நேற்றைய நாள் (பிப். 19) நகர்புற உள்ளாட்சி அமைப்புகளினுடைய தேர்தல் நடைபெற்றிருக்கிறது. அது உங்கள் அனைவருக்கும் தெரியும். நேற்று மாலையில் இதே அரங்கத்தில் அன்பகம் கலை இல்லத்தில் நடைபெறவிருக்கும் திருமணத்தையொட்டி வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றிருக்கிறது. ஆனால் அதைப் பற்றியெல்லாம் அன்பகம் கலை, கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.
மாபெரும் வெற்றி
தேர்தலில் நம்முடைய தோழர்கள் எங்கெல்லாம் சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள், எங்கெல்லாம் பிரச்சினை வந்திருக்கிறது என்பதையெல்லாம் விசாரித்துக் கொண்டிருந்தார்.
ஒவ்வொரு மாவட்டக் கழக செயலாளர்களிடத்திலும் ஒவ்வொரு சட்டப்பேரவை உறுப்பினர்களிடத்திலும் அவர் தொடர்புகொண்டு பேசிக் கொண்டிருந்தார். இதுதான் திமுக; இதுதான் திமுகவின் தொண்டன்.
நாளை மறுநாள் (பிப். 22) நகர்புற உள்ளாட்சித் தேர்தலின் முடிவுகள் வரவிருக்கிறது. அது என்ன முடிவு என்பது எல்லோருக்கும் தெரிந்த கதைதான். மிகப்பெரிய வெற்றியை பெறப்போகிறோம். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
காணொலி பரப்புரை
இப்போதுகூட தேர்தல் நேரத்தில் காணொலிக் காட்சியில் நான் பேசினேன். மக்களை சந்திக்க தைரியம் இல்லை என்று என்னைப்பற்றி சிலர் பேசினார்கள். எதற்காக நான் காணொலிக் காட்சியின் மூலமாக அந்தப் பிரச்சாரத்தை நடத்தினேன் என்று கேட்டால், கரோனா பெருந்தொற்றின் காரணத்தால், அந்தத் தொற்றுக்காக அரசு சில விதிமுறைகளை அறிவித்துள்ளது. அதனால் நான் நேரடியாகச் செல்லவில்லை.
அதே நேரத்தில் நான் பேசிய அனைத்துக் கூட்டங்களிலும் சொன்னேன், தேர்தல் முடிந்து அதனுடைய வெற்றி விழா நடக்கும்போது, நிச்சயமாக அனைத்து மாவட்டங்களுக்கும் நானே நேரடியாக வருவேன் என்று சொல்லி இருக்கிறேன்.
ஏன் வரவில்லை என்று கேட்டவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது, 'மழைக்காலத்தில் நான் வெள்ளப் பகுதிகளுக்கு சென்றபோது, ஏனப்பா இப்போது வருகிறாய், உடம்பை ஏனப்பா கெடுத்துக் கொள்கிறாய்’ என்று அக்கறையோடு கேட்கும் நிலையில்தான் இன்றைக்கு மக்கள் இருந்து கொண்டிருக்கின்றனர்.
எனவே, தேர்தல் நேரத்தில் பணியாற்றியிருக்கும் அத்தனை பேருக்கும் இந்த நேரத்தில் என்னுடைய இதயப்பூர்வமான பாராட்டையும் வாழ்த்தையும் கூறிக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த டிஜிபி!