சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், வழக்கறிஞருமான வில்சன் வேளாண் சட்டங்களுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர், "கடந்த செப்டம்பர் மாதம் மூன்று வேளாண் சட்டங்களை அவசர அவசரமாக மத்திய அரசு நிறைவேற்றியது. அவற்றை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றினார்கள். அதனை எதிர்த்து பல்வேறு தரப்பினர், வழக்கு தொடர்ந்தனர். அத்துடன் திருச்சி சிவாவும் வழக்கு தொடர்ந்தார். அந்த அனைத்து வழக்குகளும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அந்த விசாரணையில், "தென்னிந்தியா முழுவதும் வேளாண் சட்டங்களை ஆதரிப்பதாக மத்திய அரசு பொய் தகவல் தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தின் முக்கிய கட்சியான திமுக உள்ளிட்ட கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதையும், இதற்கு எதிராக நடந்து வரும் போராங்களையும் ஆதாரங்களுடன் நீதிபதிகளிடம் எடுத்துரைத்தேன்.
அவற்றை கேட்ட நீதிபதிகள், வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடையை விதித்து உத்தரவிட்டு, வேளாண் சட்டங்கள் குறித்து ஆராய
நால்வர் குழு அமைக்க அறிவுரை வழங்கி உள்ளது" எனத் தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து அவர், "நீதிமன்றம் தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி தற்போது இச்சட்டங்களுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. விவசாயிகளுக்கு நீதி கிடைக்கும் வரை திமுக தொடர்ந்து போராடும். இந்த சட்டத்தை எதிர்த்து முதல்முதலாக வழக்கு தொடர்ந்தது திமுகவினர்தான்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் பன்முகத்தன்மை இல்லை - திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன்!