சென்னை விருகம்பாக்கம் காவல்நிலையம் அருகே தேமுதிக சார்பில் சாலை தூய்மை செய்யும் பணிகள் நடைபெற்றது. இதை அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தொடங்கிவைத்தார். பின்னர் இது குறித்து அவர் கூறுகையில், "சாலிகிராமம் பகுதியில் உள்ள சாலைகளில் கடந்த ஆறு மாத காலமாக குப்பைகள் தேங்கியும், மழை காரணமாக சேரும் சகதியுமாக சுகாதாரமற்று காணப்படுகிறது. இதையறிந்த நாங்கள் எங்களது சொந்த செலவில் சாலை சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.
இந்த சீரமைப்புப் பணி அரசாங்கத்திற்கு எதிரானது அல்ல, மக்களுக்கான பணியாகும். மேலும் சாலிகிராமம் பகுதியில் குப்பை கூளம் இல்லாத சாலையாக அமைத்து தர தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடக்க வேண்டும். திமுக வழக்கு தொடர்ந்ததன் காரணமாகத்தான் உள்ளாட்சி தேர்தல் தற்போதுவரை நடத்தப்படவில்லை.
அதேபோல் பால் விலை உயர்வால், பால் உற்பத்தியாளர்கள் தான் பயனடைந்துள்ளனர். லிட்டருக்கு 6 ரூபாய் என்று இல்லாமல் படிப்படியாக பால் விலையை உயர்த்தியிருந்தால் நன்றாக இருக்கும். முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் விட்டில் அமலாக்கத் துறை சோதனை மேற்கொள்வது புதிதல்ல. உப்பு தின்னால் தண்ணீர் குடித்தே ஆகவேண்டும்" என்றார்.