கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் பாதிக்கப்படும் ஏழை எளிய மக்களுக்கு தன்னார்வ அமைப்புகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருள்களை வழங்கி வருகின்றனர். இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளதாகவும், நிவாரண உதவி செய்ய விரும்புபவர்கள் அரசு மூலமாக மட்டுமே செய்யவேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். திமுக உள்ளிட்ட கட்சிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தன.
இந்நிலையில் இன்று இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றம், "அரசியல் கட்சிகள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், ஏழை - எளிய மக்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கலாம். ஆனால், அவ்வாறு வழங்குவதற்கு 48 மணிநேரத்திற்கு முன்பு, அரசு அலுவலர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். வாகன ஓட்டுநர் தவிர மூன்று பேருக்கு மிகாமல் செல்ல வேண்டும். அரசு அறிவித்துள்ள சமூக இடைவெளி, விதிமுறைகளை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்” எனத் தீர்ப்பு வழங்கியது.
இதனையடுத்து தீர்ப்பை மேற்கோள் காட்டி அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், "சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பில், ஈகையின் நியாயமும், தர்ம சிந்தனையின் நேர்மையும், பேரிடரின் போது உதவும் கரங்களின் முக்கியத்துவமும், மனிதாபிமானமும் போற்றப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தின் உத்தரவை முழுவதுமாகக் கடைப்பிடித்து, திமுகவினர் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ வேண்டும்.
திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், பொதுநல அமைப்புகள் பல்வேறு இடங்களில் பசியால் வாடுவோருக்கு அவ்வப்போது தங்களால் முடிந்த உதவிகளை நேரடியாகச் செய்து வந்தார்கள். இந்த உதவிகள் பெரும் வரவேற்பைப் பெற்றதால், இதனை ஆளுங்கட்சியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. உயர் நீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகாவது, அதிமுக அரசு, ஏழை எளியோர் பரிதவிக்கும் இந்தப் பேரிடர் காலத்தில் தன்னை முன்னிறுத்திக்கொண்டு, அரசியல் கலந்த முக்கியத்துவம் தேடும் கவனத்தைக் கைவிட்டு, பரந்த உள்ளத்துடன், பரிவு எண்ணத்துடன், நடந்து கொள்ளும் என்றும், பசித்தோர்க்கு எதிரான நடவடிக்கைகளைக் கைவிடும் என்றும் எதிர்பார்க்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க நிபந்தனையுடன் அனுமதி - சென்னை உயர் நீதிமன்றம்!