இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டின் நீண்ட கால நதி நீர் உரிமைகள், அதிமுக ஆட்சியில் ஒவ்வொன்றாகப் பறிபோய் கொண்டிருப்பதன் அடுத்த கட்டமாக, ஆந்திர மாநில அரசு பாலாற்றின் குறுக்கே 40 அடி உயரத்திற்கு 22 தடுப்பணைகள் கட்டும் பணிகளை மேற்கொண்டு நடத்தி வருவதை, அதிமுக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.
ஐந்து மாவட்டங்களை, குடிநீர் மற்றும் பாசனத்திற்கான நீரின்றி, வறட்சிப் பிரதேசங்களாக மாற்றும் ஆபத்து நிறைந்த இந்த தடுப்பணைகளை, பொதுப்பணித்துறைத்துறையை வைத்திருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் கண்டு கொள்ளாமல், கனவுலகில் சஞ்சாரம் செய்துக் கொண்டு இருப்பது, கவலையளிக்கிறது. இந்தப் பகுதிகளில் தடுப்பணைகள் அமைக்க ஆந்திர அரசு நினைத்த போதே தடுத்தும், பிறகு அதிமுக ஆட்சியில் 12 அடி மற்றும் 20 அடி உயரம் வரை கட்டப்பட்ட போதும் கடுமையாக எதிர்த்தும் வந்திருக்கிறது திராவிட முன்னேற்றக் கழகம்.
விவசாயிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் தடுப்பணைகள் கட்டும் பணிகளை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில், கடந்த 19.7.2016 அன்றே, வேலூர் மாவட்டத்தில் மிகப் பெரிய கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருக்கிறேன். அந்த ஆர்ப்பாட்டம் நடப்பதை முன்கூட்டி அறிந்து கொண்ட அதிமுக அரசு 'தடுப்பணை கட்டத் தடை ஆணை' கேட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. ஆனால் இன்று வரை தடை உத்தரவுப் பெற முடியாமல், முதலமைச்சர் அடிக்கடி சிலாகித்துப் பெருமை பேசிக்கொள்ளும் 'சட்டப் போராட்டத்தில்' படுதோல்வியடைந்து நிற்கிறது.
வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களின் நீர் ஆதாரங்கள், வேளாண்மை, குடிநீர்த் தேவை ஆகியவற்றை மோசமான பாதிப்பிற்கு உள்ளாக்கும் இந்த 40 அடி உயர தடுப்பணைகள் கட்டும் பணியை உடனே தடுத்து நிறுத்தவும், ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பாலாறு வழக்கில் ஆந்திர மாநில அரசுக்கு எதிராக அவசர தடை உத்தரவு பெற்றிடவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று தெரிவித்துள்ளார்.