வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் பேசுகையில், “ஏற்கனவே நடந்து முடிந்த மக்களவை பொதுத் தேர்தலில், திமுக அணி ஒரே ஒரு தொகுதி தவிர்த்து, புதுவை உட்பட 38 தொகுதிகளில் மிகப்பெரிய வெற்றிபெற்றது. இந்த வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலை பொறுத்தவரை, சதியின் காரணமாக ஆளும் கட்சியான அதிமுகவும், மத்தியில் இருக்கும் பாஜகவும் தேர்தல் ஆணையத்தோடு இணைந்து, வருமான வரித்துறை துணையோடு தேர்தலைத் திட்டமிட்டு நிறுத்தினர்.
அந்தத் தேர்தலில், தற்போது திமுக மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது. வேலூர் மக்களவைத் தேர்தலில், இந்த வெற்றி முழுமையாக அமைந்துள்ளது. நாங்கள் மிகுந்த பெருமைப்படுகிறோம். அது மட்டுமில்லை, மத்தியில் இருக்கின்ற ஆட்சி, மாநிலத்தில் இருக்கின்ற ஆட்சி என இரண்டும் கூட்டணி அமைத்து அதிகார பலம், பண பலம் ஆகியவற்றைப் பயன்படுத்தியதை திமுக சந்தித்து வெற்றி பெற்றுள்ளது.
வெற்றி பெற்றுள்ள கதிர் ஆனந்துக்கு வாழ்த்துகள். மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கும், திமுக நிர்வாகிகளுக்கும், வேலூர் தொகுதி வாக்காளர்களுக்கும், வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். ஏற்கனவே நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியை, திமுக மிட்டாய் கொடுத்து வாங்கியதாக முதலமைச்சர் கூறியிருந்தார். இப்போது இந்த வெற்றியை முதல்வர் கமர்கட்டு கொடுத்து வெற்றி பெற்றோம் எனக் கூறுவார்” என்றார்.