சென்னை: தமிழ்நாட்டின் இரண்டு மாநிலங்களவை இடங்கள் காலியாக உள்ளது. இந்த இரண்டு இடங்களுக்கான தேர்தல் வாக்குப்பதிவு வரும் அக்டோபர் 4ஆம் தேதி நடைபெற இருக்கிறது. கே.பி. முனுசாமி, ஆர். வைத்திலிங்கம் ஆகியோர் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ-ஆக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பின்னர், தங்களது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர்.
இதையடுத்து, காலியாக உள்ள இந்த இரண்டு மாநிலங்களவை இடங்களில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களாக டாக்டர் கனிமொழி என்.வி.என். சோமு, கே.ஆர்.என். ராஜேஸ்குமார் ஆகியோரை அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
மூன்றாம் தலைமுறை
மகப்பேறு மருத்துவரான கனிமொழி சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் பயின்றுள்ளார். தற்போது, அவர் அப்போலோ மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். மேலும், இவர் கடந்த 2011ஆம் ஆண்டு மாதவரம் தொகுதியிலும், 2016ஆம் ஆண்டு சென்னை தி.நகர் சட்டப்பேரவை தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வியடைந்திருந்தார்.
டாக்டர் கனிமொழியின் தந்தையான என்.வி.என் சோமு திமுகவின் மூத்த தலைவராவார். 1984, 1996ஆம் ஆண்டுகளில் வடசென்னை மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட சோமு, பாதுகாப்புத்துறை இணை அமைச்சராக இருந்தவர். அவர், இணை அமைச்சராக பணியில் இருந்தபோது 1997ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி ஒரு ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.
சோமுவின் தந்தை என்.வி. நடராஜன் திமுகவின் ஐம்பெருந்தலைவர்களில் ஒருவர். 1967ஆம் ஆண்டு அண்ணாவின் தலைமையில் முதன்முதலாக உருவான அமைச்சரவையில் தொழிலாளர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார்.
நாமக்கல் மாவட்ட பொறுப்பாளர்
மற்றொரு வேட்பாளராக உள்ள கே.ஆர்.என். ராஜேஸ்குமார், திமுகவின் நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக பணியாற்றி வருகிறார். முன்னாள் ஒன்றிய அமைச்சராக இருந்த காந்திசெல்வனை இந்த பொறுப்பில் இருந்து நீக்கி, கடந்தாண்டு பிப்ரவரி மாதம் ராஜேஸ்குமார் நியமிக்கப்பட்டார்.
இவர் திமுகவின் மூத்த தலைவர்களுள் ஒருவரான நாமக்கல் கே.ராமசாமியின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மாநிலங்களவை தேர்தல் - திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு