சென்னை: போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கி தருவதாக முறைகேடு செய்த வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சரும், திமுக சட்டப்பேரவை உறுப்பினருமான செந்தில் பாலாஜியை வழக்கிலிருந்து விடுவிக்க சென்னை சிறப்பு நீதிமன்றம் மறுத்துவிட்டது.
முன்னதாக, கடந்த 2011 முதல் 2015ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த தற்போதைய தி.மு.க சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில் பாலாஜி, போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாகக் கூறி, பலரிடம் 2 கோடியே 80 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்ததாக மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இவ்வழக்கு தொடர்பாக விசாரணை நடந்துவரும் நிலையில், மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர், சென்னை, கரூர் உள்ளிட்ட இடங்களில் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான அவரது வீடு, அலுவலகங்களில் ஒரே நேரத்தில் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் மோசடி நடைபெற்ற காலகட்டத்தில் வாங்கப்பட்ட சொத்து ஆவணங்கள், தங்க நகைகளின் ரசீதுகள், ஆபரணங்கள், வேலை வாங்கி தருவதாகக்கூறி பல்வேறு நபர்களிடம் பெற்ற சுய விபரக்குறிப்புகள், நேர்காணலுக்கான அழைப்பு கடிதங்கள், அவர்களிடமிருந்து கோடிக்கணக்கில் பெற்ற பணம் குறித்த விபரங்களின் பட்டியல் கைப்பற்றப்பட்டதாக, மத்திய குற்றப்பிரிவு காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழும்பூரிலுள்ள மத்திய குற்றப் பிரிவு நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் இவ்வழக்கு, மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக்கோரி செந்தில் பாலாஜி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரமேஷ், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.